
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன், சிறுமியின் பெற்றோர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், ஆவிகொளப்பாக்கம் குறுவட்டம், வடக்கு நெமிலி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் கண்மணி தம்பதியரின் மகள் ஜெயலெட்சுமி (வயது 10) மற்றும் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் வட்டம், டி. எடையார் கிராமத்தைச் சேர்ந்த விஜி மற்றும் சினேகா தம்பதியரின் மகன் நித்தேஷ் (வயது 5) ஆகிய இருவரும் நேற்று (3.5.2025) மதியம் சுமார் 2 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் கிராமத்தில் உள்ள கூவாகம் ஏரியில் தவறி விழுந்து மேற்படி சிறுவனும், சிறுமியும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் மற்றும் சிறுமியின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த இரு குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.