கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை 14ம் தேதிக்குள் அகற்றாவிடில் அபராதம் விதிக்க நேரிடும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை

1 month ago 8

சென்னை: கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை வரும் 14ம் தேதிக்குள் முழுமையாக அகற்றாவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. துறைமுகம் – மதுரவாயல் அதிவிரைவு ஈரடுக்கு பாலம் அமைக்கும் பணிக்காக கூவம் ஆற்றில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், கட்டிட கழிவுகள் கொட்டி தூண்கள் அமைத்து வருகிறது. இது தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு, தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்திய கோபால் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, 67 சதவீத கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள கழிவுகளை அகற்ற அவகாசம் வேண்டும் எனவும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்தது. கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் ஏன் கழிவுகளை அகற்றவில்லை என கேள்வி எழுப்பிய தீர்ப்பாயம், வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3வது வாரத்தில் தொடங்கும் என தெரிவித்துள்ள நிலையில், கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை முழுமையாக அகற்றப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்தது. மேலும், வரும் 14ம் தேதிக்குள் கட்டிட கழிவுகளை முழுமையாக அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்த பசுமை தீர்ப்பாயம் விசாரணையை தள்ளி வைத்தது.

The post கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை 14ம் தேதிக்குள் அகற்றாவிடில் அபராதம் விதிக்க நேரிடும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article