"கூமாபட்டி" - பிளவக்கல் அணைக்கு செல்லத் தடை

5 hours ago 2

விருதுநகர்,

இணையத்தில் அடிக்கடி ஏதாவது ஒரு விஷயம் டிரெண்ட் ஆகிவிடுவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக இன்ஸ்டகிராம், எக்ஸ் தளம் என சமூக வலைத்தளங்களை திறந்தாலே, ஏங்க கூமாபட்டிக்கு வாங்க.. என்று பரவும் வீடியோக்கள்தான் பார்க்க முடிகிறது. இதனால், ஒரே நாளில் அகில உலக பேமஸ் ஆகிவிட்டது கூமாபட்டி.

இணையத்தில் வைரல் ஆகும் இந்த வீடியோவில் பேசும் நபர் ஒருவர், " யாருக்கேனும் மன அழுத்தம் இருந்தாலும் சரி, மன உளைச்சல் இருந்தாலும் சரி அதை சரி பண்ண இந்த கூமாபட்டிக்கு வாங்க, இந்த கூமாப்பட்டி ஒரு தனி தீவு, இது ஒரு ஐலேண்டு, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் இந்த கூமாப்பட்டியில் அதிக அளவிலான இயற்கை சார்ந்த இடங்கள் உள்ளது என்று பேசியிருந்தார். அந்த வீடியோவில் கூமாபட்டியை சுற்றியுள்ள இயற்கை வளங்களையும் காட்டியிருந்தார்.

இணையத்தில் வீடியோ வைரல் ஆன நிலையில், இளைஞர்கள் பலரும் கூமாபட்டி எங்கே இருக்கிறது என அந்த ஊருக்கு வழி தேட ஆரம்பித்துவிட்டனர். இதனால், கூமாபட்டி என்ற கிராமம் இணைய தேடுதலில் முன்னிலையில் இருந்து வருகிறது. இதனால், அந்த கூமாபட்டி கிராமம் தமிழக அளவில் மிகவும் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு என்ற ஊருக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்தில்தான் இந்த கூமாப்பட்டி கிராமம் அமைந்துள்ளது.

வைரலான விடியோவானது பிளவக்கல் அணையில் எடுக்கப்பட்டதாகும். பிளவக்கல் அணையில் வெளி நபர்களுக்கு அனுமதி இல்லை என ஏற்கனவே பொதுப்பணித்துறை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. எனினும், கூமாபட்டிக்கு படையெடுக்கத் துவங்கிய சுற்றுலா பயணிகள், பிளவக்கல் அணைக்கும் வரத்தொடங்கியுள்ளனர். உள்ளூர் வாசிகளின் துணையோடு ஒரு சில வெளிநபர்கள் அணையின் பின்புறம் வழியாக உள்ளே சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், "இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை நம்பி யாரும் பிளவக்கல் அணைக்கு வர வேண்டாம் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. தடையை மீறி யாரும் நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிளவக்கல் அணைக்கு செல்லும் அனைத்து வழிகளையும் பொதுப்பணித்துறை அடைத்து தடையை ஏற்படுத்தியுள்ளது.

 

Read Entire Article