சென்னை: கூட்டுறவு நிறுவனங்களில் பணி செய்யும் ஊழியர்கள் அனைவருக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று அரசுக்கு தொமுச நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு மாநில நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (தொமுச) மாநில தலைவர் து.பிச்சை, பண்டகசாலை பொதுச்செயலாளர் பத்மநாபன், பொருளாளர் இரா.பழனியப்பன், டியுசிஎஸ் தொமுச பொதுச்செயலாளர் ராஜன் சாமிநாதன் ஆகியோர் சென்னை, தலைமை செயலகத்தில் கூட்டுறவு, உணவு வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் பதிவாளர் என்.சுப்பையன் ஆகியோரிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
கூட்டுறவு நிறுவனங்கள் சொந்த நிதி மற்றும் வங்கியில் கடன் பெற்று ஊழியர்களுக்கான ஊதியம், நியாயவிலை கடைகளுக்கான வாடகை, மின்சார கட்டணம், பொருட்கள் ஏற்றி செல்லும் லாரி வாடகை, ஓய்வூதியம், கொள்முதல் பொருட்கள் போன்ற அத்தியாவசியமான செலவுகளை செய்கிறது. இந்த தொகை அரசிடம் இருந்து விடுப்பு தொகையாக கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும். ஆனால், கடந்த 2021-22ம் ஆண்டின் மானியத்தில் 3 சதவீதம் நிலுவை தொகையாகவும், 2022-23ல் 51 சதவீதம், 2023-24ல் 40 சதவீதம், 2024-25ம் ஆண்டுக்கான மானியத்தில் முன்பண மானியமும் விடுவிக்கப்படவில்லை.
இதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு நிலுவையில் உள்ள ரூ.750 கோடியை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வித பாரபட்சமும் இன்றி கூட்டுறவு தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் 20 வருடங்களுக்கு மேலாக பணி செய்தும் இன்னமும் பணி வரன்முறைபடுத்தப்படவில்லை. இவர்களுக்கு விரைவில் பணி வரன்முறைபடுத்தி உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்க வேண்டும்: அரசுக்கு தொமுச கோரிக்கை appeared first on Dinakaran.