பெங்களூரு: ஒரு பெண்ணை கடத்தி சென்று எம்எல்ஏ அலுவலகத்தில் வைத்து பாஜ எம்எல்ஏ முனிரத்னா மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக மேலும் ஒரு பெண் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து எம்எல்ஏ உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சரும் திரைப்பட தயாரிப்பாளருமான முனிரத்னம், மீது ஏற்கனவே பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கொடுத்த புகார் அடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
உயர்நீதிமன்றம் வழங்கிய நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மேலும் ஒரு பெண் முனிரத்னம் மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் முனிரத்னம் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து பெங்களூரு ஆர்.எம்.சி. யார்டு போலீஸ் நிலையத்தில் 40 வயது இளம் பெண் ஒருவர் கொடுத்துள்ள புகாரில், நான் பீன்யா 2வது ஸ்டேஜில் வசிக்கிறேன். நான் பாரதிய ஜனதா கட்சியில் தொண்டராக உள்ளேன். நான் விபச்சார தொழில் செய்வதாக என் மீது பீனியா போலீஸ் நிலையத்தில் பொய் புகார் கொடுக்கப்பட்டது. அதையேற்று வழக்குப்பதிவு செய்த போலீசார், என்னை சிறையில் அடைத்தனர். இது தவிர கொலை வழக்கிலும் என்னை சிக்க வைத்தனர்.
சில மாதங்கள் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையானேன். வழக்குகளை முடித்து வைப்பதாக கூறி கடந்த 2023 ஜூன் 11ம் தேதி கட்சியினர் சிலர் முனிரத்னம் எம்எல்ஏ அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு, முனிரத்னத்தின் உத்தரவின் பேரில் அவரது ஆதரவாளர்கள் வசந்த், கமல் மற்றும் சென்னகேசவா ஆகியோர் என்னை பாலியல் வன் கொடுமை செய்தனர். என்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியபின், முனிரத்னம் என் முகத்தின் மீது சிறுநீர் கழித்து அவமதித்தார். இதையடுத்து ஒரு வெள்ளைப்பெட்டியை திறந்து அதில் இருந்த ஊசியை எடுத்து ஆபத்தான வைரஸை எனக்கு செலுத்தினார். இதனால், எனக்கு இடிஆர் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்று புகாரில் தெரிவித்துள்ளார். அதையேற்று முனிரத்னம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வசந்த், கமல் மற்றும் சென்னகேசவா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த புகாரில் முனிரத்னம் கைது செய்யப்படலாம் என்று போலீஸ் வட்டாரம் மூலம் தெரியவருகிறது.
The post கூட்டாளிகளுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் பாஜ எம்எல்ஏ முனிரத்னம் மீது கட்சி பெண் தொண்டர் புகார்: 4 பேர் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.