கூட்டப்பள்ளியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

2 hours ago 1

*அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு : கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, திருச்செங்கோட்டில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்னையை வலியுறுத்தி, நகர்மன்ற கூட்டத்தில் அதிமுக மற்றும் பாஜ கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில், அண்ணா வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் அமைந்துள்ள கூட்டப்பள்ளி காலனி, 19, 20 மற்றும் 21 வார்டுகளை கொண்டது. இங்கு சுமார் 4 ஆயிரம் குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த குடியிருப்புக்கு அருகே 12 ஏக்கரில் கூட்டப்பள்ளி ஏரி உள்ளது.

கடந்த 1998ம் ஆண்டு கூட்டப்பள்ளி ஏரியின் கரைகள் உடைக்கப்பட்டு, குப்பை கொட்டும் கிடங்காக மாற்றப்பட்டதால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து நகராட்சியின் குப்பைகள் கொட்டுவதற்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, குப்பைகள் கொட்டுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் திருச்செங்கோட்டில் உள்ள சாக்கடை கால்வாயில் வரும் கழிவுநீர், கூட்டப்பள்ளி ஏரிக்கு சென்று சேர்கிறது. இதனை கருத்தில் கொண்டு, நகராட்சி நிர்வாகம் கூட்டப்பள்ளியில் ரூ.36.67 கோடியில் எஸ்டிபி எனப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, திட்ட வரையறை மேற்கொள்ளப்பட்டு, அதனை கடந்த சில நாட்களுக்கு முன்பு, கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டப்பள்ளியில் உள்ள மக்கள், தங்கள் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும், சுகாதார சீர்கேடு ஏற்படும். எனவே, கூட்டப்பள்ளி ஏரியை தூர்வாரி, நீர்நிலையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனை வலியுறுத்தி, நேற்று திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு 200க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முறையான அனுமதி இல்லாத நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வாகனங்களில் ஏற்ற போலீசார் முயன்றபோது, வாகனங்களில் ஏறாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் வாக்குவாதம் செய்தனர்.

இதனையடுத்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கை கைவிடப்பட்டது. இதையடுத்து, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி மற்றும் நகராட்சி பொறியாளர் சரவணன் ஆகியோரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இந்த போராட்டம் குறித்து கூட்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த நாகராஜன் கூறுகையில், ‘கூட்டப்பள்ளியில் தற்போது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளனர். ஓடை புறம்போக்கு பகுதியில் எந்த கழிவுநீர் திட்டமும் வரக்கூடாது என அரசாணை இருந்தும், நகராட்சி நிர்வாகம் இதுபோல் செய்து வருகிறது. எனவே, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது. ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.

இந்நிலையில், நேற்று நகர்மன்ற கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திலும் இந்த பிரச்னை எதிரொலித்தது. திமுக உறுப்பினர்கள் இந்த திட்டத்தை மேஜையை தட்டி வரவேற்றனர். அதிமுக உறுப்பினர்கள் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து, நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கூறும்போது, இந்த சுத்திகரிப்பு நிலையம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதி பெற்று அமைக்கப்படுகிறது. கழிவுநீர் 5 கான்கிரீட் கிணறுகளில் நிரப்பப்பட்டு, சுத்திகரிப்பு நிலையம் கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்படும்.

அந்த நீர் விவசாய பயன்பாட்டுக்கு தரப்படும். திருச்செங்கோட்டில் கூட்டப்பள்ளி 159 அடி தாழ்வாக இருப்பதால், நகராட்சி எல்லையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஒன்றிய அரசு 50 சதவீத நிதி அளிக்கிறது. 33 சதவீத நிதி மாநில அரசால் தரப்படுகிறது. மீதியுள்ள செலவினத்தை நகராட்சி ஏற்கும்.

இதனை பாஜ உறுப்பினரே எதிர்ப்பது வேதனை அளிக்கிறது. இந்த பிரச்னையில் அதிமுக இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது. இப்பிரச்னை குறித்து கூட்டப்பள்ளி பொதுமக்களுக்கு, நகர்மன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், வல்லுனர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

The post கூட்டப்பள்ளியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article