புதுடெல்லி: மகாராஷ்டிரா, ஜார்கண்ட்டில் கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு, முதல்வர் வேட்பாளர் விவகாரம் உட்பட பல விசயங்கள் காங்கிரசுக்கு பெரும் சவால்களாக காத்திருக்கின்றன. அரியானாவில் ஏமாந்தது போல் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக பாஜகவை வீழ்த்த புதிய வியூகங்களை வகுத்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த மாநிலங்களுக்கு மூத்த பார்வையாளர்களை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது. சமீபத்தில் நடந்த அரியானா பேரவை தேர்தலில் நடந்த தவறுகள் போன்று மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய புதிய வியூகங்களை காங்கிரஸ் வகுத்துள்ளது. இருந்தாலும் கூட்டணி கட்சிகளுடன் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்வது என்பது காங்கிரசுக்கு உள்ள மிகப்பெரிய சவாலாக உள்ளது.
அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் பேரவை தேர்தலில் காங்கிரசின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அதனால் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு என்பது காங்கிரசுக்கு நிறைய அழுத்தம் இருக்கும். லோக்சபா தேர்தலில் பாஜகவை பெரும்பான்மை பலத்தை எட்ட முடியாத அளவிற்கு பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ், அரியானா மற்றும் ஜம்மு – காஷ்மீர் சட்டசபை தேர்தல்களில் மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்கியது. ஆனால் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. இப்போது மகாராஷ்டிராவிலும், ஜார்கண்டிலும் காங்கிரசுக்கு மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கின்றன. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) – சிவசேனா (உத்தவ்) கூட்டணி சிறப்பாக செயல்பட்டதால் 48 ெதாகுதியில் 30 தொகுதிகளை இந்த கூட்டணி அள்ளியது. குறிப்பாக காங்கிரஸ் அதிகபட்சமாக 13 இடங்களை கைப்பற்றியது.
அரியானா தேர்தலில் காங்கிரஸ் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், சரத் பவாரும், உத்தவ் தாக்கரேவும் தொகுதிப் பங்கீட்டில் காங்கிரசுக்கு அழுத்தத்தை கொடுக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், ஆளும் பாஜக கூட்டணியை தோற்கடிக்க காங்கிரசின் பலத்தை இந்த கட்சிகள் புறக்கணிக்க முடியாது என்பதால், ெதாகுதி பங்கீட்டில் சுமூகமான உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இணைந்து பாஜகவை பின்னுக்குத் தள்ளியது. இம்முறை, உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து இருப்பதால் ‘இந்தியா’ கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. அதேசமயம் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா பிளவுபட்டுக் கிடப்பதால் இந்த தேர்தல் முக்கிய திருப்பமாக இருக்கும். மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 இடங்களில் 110 முதல் 115 இடங்களில் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது.
உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 90 முதல் 95 இடங்களையும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 80 முதல் 85 இடங்களிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளன. தொகுதிப் பங்கீட்டை பொருத்தமட்டில் கட்சிக்களுக்குள் விட்டுக்கொடுத்து போக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் மகாராஷ்டிரா தேர்தலில் சமாஜ்வாடி கட்சியும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. இன்னும் ஆம்ஆத்மி என்ன செய்யப் போகிறது என்பது தெரியவில்லை. இந்த இரு கட்சிகளும் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ‘இந்தியா’ கூட்டணியில் மகாராஷ்டிரா முதல்வர் வேட்பாளர் யார்? என்பது கூட்டணிக்குள் மிகப்பெரிய குழப்பம் உள்ளது. உத்தவ் தாக்கரேவை முதல்வர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று அவரது சிவசேனா கட்சி விரும்புகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு இதில் உடன்பாடு இருப்பதாகத் தெரியவில்லை.
லோக்சபா தேர்தலில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்த காங்கிரஸ், இந்த விஷயத்தில் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. இருப்பினும், சிவசேனாவின் உத்தவ் தரப்பில் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டை மாற்றுவதற்கான அறிகுறிகள் ெதன்படுகின்றன. மகாராஷ்டிரா தேர்தலுடன் ஜார்கண்டிலும் பேரவை தேர்தல் நடப்பதால், இங்கும் காங்கிரஸ் கட்சி இளைய பங்காளியாகவே இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஜார்கண்டைப் பொறுத்தவரை, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 81 இடங்களில் 43 இடங்களில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா போட்டியிட்டு 30 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 31 இடங்களில் போட்டியிட்டு 16ல் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு ெசல்வாக்கு அதிகமாக இருந்ததால் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா பெரும்பான்மை பலத்தை பெற்றும், கூட்டணி தர்மபடி காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு கொடுத்தது.
மேலும் இந்த கூட்டணியில் அங்கம் வகித்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் 7 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. இம்முறை ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் மா.கம்யூ (எம்எல்) கட்சியும், கூட்டணியில் இடம் பெற விருப்பம் தெரிவித்துள்ளது. கடந்த முறை 15 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் – மா.கம்யூ (எம்எல்) கட்சிகள் தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்கின்றன. இந்த முறை தொகுதி பங்கீடு மற்றும் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கட்சிக்கள் சீட் ஒதுக்கீட்டில் போட்டிகள் நிலவி வருகிறது. இதற்கு காரணம் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட போது, அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா ெசய்தார்.
அப்போது அமைச்சராக இருந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவரான சம்பாய் சோரன் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். ஜாமீனில் ஹேமந்த் சோரன் வெளியே வந்தபின், மீண்டும் அவர் முதல்வரானார். சம்பாய் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா ெசய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். அதனால் கடுப்பான அவர், திடீரென பாஜகவில் சேர்ந்துவிட்டார். பழங்குடியின தலைவரான சம்பாய் சோரன், பாஜகவில் சேர்ந்திருப்பது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தேர்தல் முடிவுகளின் போது தெரிந்துவிடும்.
பிரியங்காவுக்கு முதல் தேர்தல் அரசியல்
கடந்த லோக்சபா தேர்தலில் கேரளாவின் வயநாடு, உத்தரபிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரு ெதாகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். தேர்தல் விதிமுறைகளின்படி, ஒரு தொகுதி எம்பியாக மட்டுமே ஒருவர் இருக்க வேண்டும் என்பதால், தனது வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ரேபரேலி எம்பி பதவியை ராகுல்காந்தி தக்கவைத்துக் கொண்டார். அதனால் வயநாடு தொகுதி காலியானது. இந்த தொகுதியில் வரும் நவ. 13ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இந்த தேர்தல் மூலம் தனது முதல் அதிகாரபூர்வ அரசியல் பயணத்தை பிரியங்கா காந்தி தொடங்குகிறார். கடந்த 1999ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் பிரியங்கா காந்தி இருந்தாலும் கூட, அவர் தேர்தல் அரசியலில் இறங்கவில்லை. தனது தாயார் சோனியா காந்திக்காக அமேதியில் பிரசாரம் செய்தார். பின்னர் நாடு முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக பிரசாரம் மேற்கொண்டார். ஆனால் இந்த முறை வயநாட்டில் போட்டியிடுவதால், அனைவரது பார்வையும் பிரியங்கா காந்தியின் மீதுதான் உள்ளது.
2 மாநில தேர்தல் எப்போது?
மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 20ம் தேதியும், ஜார்க்கண்டில் நவம்பர் 13 மற்றும் 20ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இவை தவிர, 15 மாநிலங்களில் உள்ள 47 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கேரளாவில் வயநாடு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 13ம் தேதியும், மகாராஷ்டிரா மாநிலம் நாந்தோட் மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 20ம் தேதியும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இடைத்தேர்தல் முடிவுகளும் நவம்பர் 23ம் தேதி அறிவிக்கப்படும்.
நேரு குடும்பத்தின் 10வது உறுப்பினர்
வயநாடு தொகுதியில் முதன்முதலாக பிரியங்கா காந்தி போட்டியிடும் நிலையில், அவருக்கு முன்பு நேரு – இந்திரா காந்தி குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தேர்தல் அரசியலில் போட்டியிட்டனர். அவர்களில் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ஃபிரோஸ் காந்தி, சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, மேனகா காந்தி, வருண் காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வரிசையில் 10வது நபராக பிரியங்கா காந்தி வயநாட்டில் களமிறங்குகிறார். நேரு குடும்பத்தில் இருந்து முன்னாள் பிரதமரான பாட்டி இந்திரா காந்தி, தாய் சோனியா காந்தி, பெரியம்மா மேனகா காந்தி ஆகியோருக்குப் பிறகு, தேர்தல் அரசியல் களத்தில் நுழையும் நான்காவது பெண்ணாக பிரியங்கா காந்தி உருவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவுக்கு பெரும் தலைகள் நியமனம்
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 11 மூத்த பார்வையாளர்களை காங்கிரஸ் நியமித்துள்ளது. ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல், பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா, மத்தியப் பிரதேச சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உமாங் சிங், ராஜஸ்தானின் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், தெலங்கானா அமைச்சர் உத்தர் குமார் ரெட்டி, சட்டீஸ்கரின் முன்னாள் துணை முதல்வர் டி.எஸ்.சிங்தேவ், கர்நாடக அமைச்சர் எம்.பி.பாட்டீல், தெலங்கானா அமைச்சர் அனுசுயா சீதக்கா, பொதுச் செயலாளர்கள் சச்சின் பைலட், முகுல் வாஸ்னிக், அவினாஷ் பாண்டே ஆகியோரை கொண்ட பெரும் படை களமிறக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜார்கண்டிற்கு பீகார் எம்பி தாரிக் அன்வர், மேற்குவங்க முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தெலங்கானா துணை முதல்வர் மல்லு பதி விக்ரமார்கா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரியானா பேரவை தேர்தலில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் ஆகியோரை கட்சி பார்வையாளர்களாக காங்கிரஸ் நியமித்தது. ஆனால் அங்கு காங்கிரஸ் 37 இடங்களை வென்றும் பெரும்பான்மை எண்ணிக்கையை பெற முடியாமல் ஆட்சியமைக்க முடியாமல் போனது. அரியானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்புகள் கூறியது. ஆனால் அனைத்தும் பொய்த்துப் போனது. இவ்விசயத்தில் மாநில தலைமையின் மீது குற்றச்சாட்டுகளை கூறி, வழக்கம் போல் காங்கிரஸ் தனது பழைய தவறை முயற்சித்துள்ளது. எனவே மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியை வீழ்த்துவதற்காகவே பெரும் தலைவர்களை காங்கிரஸ் பார்வையாளர்களாக களமிறக்கி உள்ளது.
மாயாவதி தனித்துப் போட்டி
மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான மாயாவதி வெளியிட்ட அறிவிப்பில், ‘மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டப் பேரவை தேர்தல் மற்றும் உத்தரபிரதேசத்தில் 9 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும்’ என்று தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் 9 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது.
ஜாதி அமைப்புகள் மீண்டும் கோஷம்
மகாராஷ்டிர சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, மராத்தா இடஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே மற்றும் ஓபிசி அமைப்பின் நிறுவனர் லட்சுமண ஹக் ஆகியோர் தங்களது கோரிக்கைகளை தெளிவுபடுத்தியுள்ளனர். இவை மகாராஷ்டிராவில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி கூட்டணிக்கு சவாலாக மாறியுள்ளது. மராத்தா இடஒதுக்கீடு கோரி 14 மாதங்களில் ஏழு முறை உண்ணாவிரதம் இருந்த மனோஜ் ஜாரங்கே கூறுகையில், ‘தேர்தலில் போட்டியிட மாட்டேன். ஆனால் தேர்தல் தொடர்பாக, மராத்தா சமாஜ் சபா கூட்டத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும். எங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்குமாறு அரசுக்கு ஏற்கனவே கெடு விதித்திருந்தோம். இப்போது அந்த கெடு முடிந்துவிட்டது. பாஜக துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மராத்தியர்களுக்கான இடஒதுக்கீட்டைத் தடுக்கிறார்’ என்று குற்றம் சாட்டினார். அதேபோல் இரண்டு முறை உண்ணாவிரதம் இருந்த ஓபிசி தலைவர் லட்சுமண ஹக் கூறுகையில், ‘இந்த தேர்தலில் ஓபிசி சமூகத்தினர் ஒன்றிணைந்து பலத்தை காட்ட வேண்டும். அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை முதலில் தேர்வு செய்யட்டும். பின்னர் எங்களது முடிவை அறிவிப்போம்’ என்றார்.
பிரியங்காவை எதிர்த்து இடதுசாரி வேட்பாளர்
வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து இ.கம்யூ. கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் பினோய் விஸ்வம் கூறுகையில், ‘போராட்டத்துக்குப் போர்க்களம் தயாராக உள்ளது; இந்த போரை எதிர்கொள்ள இடதுசாரி கூட்டணி தயாராக உள்ளது. மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளோம். இடதுசாரி தொண்டர்கள் விருப்பங்களை பூர்த்தி செய்வோம். தேர்தல் களத்தில் போராடுவோம். இடதுசாரிகளை மக்கள் ஆதரிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம். வயநாடு தொகுதியில் இடதுசாரி வேட்பாளரை களமிறக்குவோம்’ என்றார். ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம்வகிக்கும் இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தியை எதிர்த்து தங்களது வேட்பாளரை களமிறக்க உள்ளதால் வயநாடு இடைத்தேர்தல் களம் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு, முதல்வர் வேட்பாளர் விவகாரம் உட்பட மகாராஷ்டிரா, ஜார்கண்ட்டில் காங்கிரசுக்கு காத்திருக்கும் சவால்கள்: அரியானாவில் ஏமாந்ததால் பாஜகவை வீழ்த்த புதிய வியூகம் appeared first on Dinakaran.