நெல்லை: பயணிகள் கூட்ட நெரிசல் காரணமாக தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரம் வடக்கு பகுதிகளுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையை தெற்கு ரயில்வே நீட்டிப்பு செய்துள்ளது. கோடை விடுமுறை முடியும் தருவாயில், வரும் ஜூன் 2ம்தேதி பள்ளிகள் திறக்க உள்ளன. பள்ளிகள் திறப்பு மற்றும் பக்ரீத் பண்டிகை ஆகியவை காரணமாக தினசரி ரயில்கள் மட்டுமின்றி, வாராந்திர ரயில்களிலும் தற்போது கூட்டம் அலைமோதி வருகிறது. இதன் காரணமாக தெற்கு ரயில்வே பல்வேறு ரயில்களின் சேவைகளை நீட்டித்து வருகிறது. நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாராந்திர ரயிலின் சேவை ஏற்கனவே ஜூன் மாதம் முடிய நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தாம்பரத்தில் இருந்து நெல்லை வழியாக நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ், தாம்பரத்தில் இருந்து தென்காசி வழியாக திருவனந்தபுரம் வடக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவைகளும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் வாராந்திர ரயில் (எண்.06012) வரும் ஜூன் 8, 15,22 ஆகிய ஞாயிற்று கிழமைகளில் இரவு 11.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் போய் சேரும். மறுமார்க்கமாக தாம்பரம்- நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் (எண்.06011) வரும் ஜூன் 9,16,23ம் தேதி திங்கள் கிழமைகளில் பகல் 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுதினம் காலை 5.15 மணிக்கு நாகர்கோவில் போய் சேரும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் வழியாக நாகர்கோவில் போய் சேரும். பள்ளிகள் திறப்பை முன்னிட்டு தாம்பரம் – திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரயிலின் ஒரு சேவையை மட்டும் தெற்கு ரயில்வே நீட்டிப்பு செய்துள்ளது.
அதன்படி தாம்பரத்தில் வரும் ஜூன் 6ம் தேதி வெள்ளிக்கிழமையன்று இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுதினம் காலை 5.25 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு போய் சேரும். மறுமார்க்கமாக அந்த ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து ஜூன் 8ம் தேதி ஞாயிற்று கிழமை புறப்பட்டு தாம்பரம் செல்லும். தாம்பரம் – திருவனந்தபுரம் வடக்கு ரயிலானது விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, ெகால்லம் வழியாக திருவனந்தபுரம் செல்கிறது. சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பை பயணிகள் பயன்படுத்தி கொள்ள தெற்கு ரயில்வே கேட்டு கொண்டுள்ளது.
The post கூட்ட நெரிசல் எதிரொலி: தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம் செல்லும் ரயில்களின் சேவை நீட்டிப்பு appeared first on Dinakaran.