
டெல்லி,
டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் உள்ள ரெயில் நிலையத்தில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சிக்கு செல்ல காத்திருந்த பயணிகள் முண்டியடித்து ரெயிலில் ஏற முயற்சித்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், டெல்லி ரெயில்நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட நிர்வாக திறனற்ற செயலுக்காக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும். அவர் பதவி விலகவில்லையென்றால் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். மணிக்கு 1,500 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும்போது எத்தனை பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் நுழைந்திருப்பார்கள் என்று ரெயில்வே அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். கூட்டத்தை நிர்வகிக்க போதிய ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் எங்குமே இல்லை. பயணிகளே கூட்டத்தை நிர்வகித்துள்ளனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு இந்த விபரீதம் அரங்கேறியுள்ளது' என்றார்.