
சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
திருச்செந்தூர் கோவிலில், கூட்டநெரிசலால் உயிரிழந்த, காரைக்குடியைச் சேர்ந்த ஓம் குமார் அவர்களின் மனைவி எழுதியதாக, அமைச்சர் சேகர்பாபு கூறிய கடிதத்தைப் படித்துப் பார்த்தேன்.
அந்தக் கடிதத்தின் சில வரிகளை கோடிட்டுக் காட்டியுள்ளேன். இப்படி ஒரு கடிதம் கொடுத்தால் தான் இறந்தவரின் உடலைக் கொடுப்போம் என்ற வற்புறுத்தலின் பெயரில் எழுதப்பட்ட கடிதம் போல் உள்ளது.
மறைந்த ஓம் குமாரின் குடும்பத்தார் மேலும், தனியார் ஊடகத்தில், நேற்று அளித்த நேர்காணலைப் பார்த்தேன். கடிதத்தில் உள்ள விவரங்களுக்கும், அவர்கள் ஊடகத்தில் தெரிவித்ததற்கும் எத்தனை முரண்கள்.
தங்கள் ஆட்சியின் கையாலாகாத்தனத்தை மறைக்க, பொதுமக்கள் உயிரை மலிவாக எண்ணும் அமைச்சர் சேகர் பாபு, அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பதை உணர்ந்தால் நன்று.
கூட்ட நெரிசலில் உயிரிழந்த ஓம் குமார் அவர்களின் குடும்பத்தாருக்கு, 10 லட்ச ரூபாய் நிவாரணமாக, தமிழக அரசு உடனடியாக, வழங்கவேண்டும் என்றும், இனியும் கோவில்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க, முறையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும், தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.