கனிமவளங்கள் கடத்திய 60 வாகனங்கள் பறிமுதல்

5 hours ago 2

கிருஷ்ணகிரி, மார்ச் 10: கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து, கர்நாடக மாநிலத்திற்கு கனிமவளங்கள் கடத்திச் சென்ற 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து மணல், கற்கள், கிரானைட் உள்ளிட்டவை வெளி மாநிலங்களுக்கு எடுத்துச்செல்ல உரிய நடைசீட்டும், 50 சதவீதம் பசுமை வரியும் செலுத்தப்பட வேண்டும். இந்நிலையில், அனுமதியின்றி கனிமவளங்களை எடுத்துச்செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும், அனுமதி இல்லாமல் இயங்கும் குவாரிகள், கிரஷர்களை கண்டறிந்து குற்றவியல் மற்றும் அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டார்.

இதன்பேரில், தாசில்தார்கள் தலைமையில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர் மற்றும் கனிமவளத்துறை அலுவலர்கள் கொண்ட 8 சிறப்பு குழுக்களும், வருவாய் ஆய்வாளர்கள் தலைமையில் 11 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கடந்த பிப்ரவரி மாதம் 4ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையும், குவாரிகளில் ஆய்வும் மேற்கொண்டனர். இதில், அனுமதியின்றி கனிமவளங்கள் ஏற்றிச்சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்தனர். அதன்படி, கனிமவளத்துறையினர் 9 வாகனங்களையும், காவல்துறையினர் 9, வருவாய் துறையினர் 42 என மொத்தம் 60 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், பர்கூர் வட்டத்தில் மோடிகுப்பம், புலிகுண்டா, தேன்கனிக்கோட்டை சந்தனப்பள்ளி, மேடுமுத்துக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் உரிய அனுமதியின்றி கள்ளத்தனமாக கருப்பு கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டதை ஆய்வில் கண்டறிந்த அலுவலர்கள், தொடர்புடையவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, 5 வழக்குகள் பதிவு செய்தனர். மேலும், சூளகிரி வட்டத்தில் புக்கசாகரம் மற்றும் ஓசூர் வட்டத்தில் ஆலூர் பகுதியில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெறாமல், சேமிப்பு கிடங்கிற்கான அனுமதியின்றி இயங்கி வந்த 2 கிரஷர்களுக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் சீல் வைத்தனர்.

இதுகுறித்து கலெக்டர் தினேஷ்குமார் கூறுகையில், மாவட்டத்தில் அரசு அனுமதியின்றியும், குத்தகை காலம் முடிந்த பின்பும் தொடர்ந்து இயங்கும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குவாரி நடத்துபவர்கள், சேமிப்பு கிடங்கு வைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமும் அனுமதி பெற வேண்டும், இல்லாவிட்டால், அபராதம் விதிக்கப்படுவதுடன், குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். இதேபோல், கனிமவளங்களை உரிய அனுமதிச்சீட்டு, பசுமை வரி செலுத்தாமல் கர்நாடகாவிற்கு எடுத்துச்செல்லும் வாகனங்களை சிறப்பு குழுவினர் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார்.

The post கனிமவளங்கள் கடத்திய 60 வாகனங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article