சேலம், மார்ச் 18: சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த அரசிராமணி செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அப்போது மாணவர்கள் கூறுகையில், ‘‘செட்டிப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். உயர்நிலைப்பள்ளியாக செயல்பட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் அதற்கான வசதிகள் செய்து தரப்படவில்லை.
குறிப்பாக கூடுதல் வகுப்பறைகள் இல்லாததால், ஆய்வகங்களிலும், தற்காலிக கூடாரம் அமைத்தும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் கவனச்சிதறல் ஏற்பட்டு வகுப்பறையை கவனிக்க முடியாமல் போகிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர். தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் மாணவர்களை அழைத்து பேசினர். அப்போது, கூடுதல் வகுப்பறைக்கு அரசுக்கு பரிந்துரை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதி அளித்தனர்.
The post கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர நடவடிக்கை appeared first on Dinakaran.