
புதுடெல்லி,
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் கடந்த ஓராண்டுக்கு மேலாக பொருளாதார வீழ்ச்சியால் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை எல்லாம் பல மடங்கு உயர்ந்து இருக்கிறது.
குறிப்பாக, ஒரு கிலோ கோழிக்கறி ரூ.800, ஒரு கிலோ அரிசி ரூ.340, ஒரு டஜன் முட்டை (12) ரூ.330, ஒரு லிட்டர் பால் ரூ.224 என்ற விலையில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. கடும் வறட்சியும் அங்கு நிலவி வருவதால், மொத்தம் உள்ள 25 கோடி மக்கள்தொகையில் சுமார் 1 கோடி பேர் பட்டினியால் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இப்படி, பாகிஸ்தானின் பொருளாதாரம் அதளபாதாளத்தில் விழுந்துகிடக்கும் நேரத்தில்தான், தேன்கூட்டில் கைவைத்ததுபோல, கடந்த 22-ந் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலும் அரங்கேறி இருக்கிறது. விளைவு, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள், வீரர்கள் எல்லாம் விடுப்பில் வெளியேறுவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுவாக, இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டால், ராணுவ பலம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு அலசப்படும். யாருக்கு வெற்றி வாய்ப்பு ஏற்படும்? என்றும் கணிக்கப்படும்.
ஆனால், பாகிஸ்தானுக்கு இப்போது கூடுதலாக பொருளாதார சிக்கலும் ஏற்பட்டுள்ளதால், அதையும் அலச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் இப்படி பின்தங்கியிருக்கும் நிலையில், இந்தியாவுடன் போர் தொடுக்க முடியுமா?, அதனால் ஏற்படும் கூடுதல் நிதிச் சுமையை எவ்வாறு சமாளிக்கும்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு முக்கிய ஒப்பந்தங்களை இந்தியா நிறுத்திவைத்துள்ளதால், பாகிஸ்தானின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது. சிந்து நதிநீரும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள 2 மாகாணங்களில் 90 சதவீதம் விவசாயம் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. பிரதான பயிர்களான கோதுமை, அரிசி, பருத்தி உற்பத்தி பெருமளவு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, 1 கோடி மக்கள் பசி-பட்டினியால் தவித்து வரும் நிலையில், விவசாயமும் பாதிக்கப்பட்டால் அதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, பாகிஸ்தானில் கராச்சி பங்குச் சந்தையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு போர் பதற்றமே காரணமாக சொல்லப்படுகிறது. பாகிஸ்தானின் கடன் அளவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 70 சதவீதத்தை தாண்டியுள்ளது. அரசு வருவாயிலும் 40 முதல் 50 சதவீதம் வட்டி செலவுக்கே சென்றுவிடுகிறது.
இப்படி கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நேரத்தில்தான் பாகிஸ்தானில் போர் மேகமும் சூழ்ந்துள்ளது. அணு ஆயுதங்களுக்கு பதில் முதல் ஆயுதமாக தண்ணீரை எடுத்த இந்தியாவின் ராஜதந்திரமும் படிப்படியாக வேலை செய்யத் தொடங்கியிருக்கிறது. இனி அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்..