திண்டுக்கல், நவ.5: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதையொட்டி தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் பணி புரியும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். நான்கு நாட்கள் விடுமுறை முடிந்து திண்டுக்கல்லில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஊர்களுக்கு திரும்பினர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் ஊர்களுக்கு திரும்பியதால், பஸ்கள் மற்றும் ரயில்களில் இடம் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில் ஆம்னி பஸ்களில் அதிகம் கட்டண வசூலிப்பதாக திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புகார் வந்தது.
இதன் அடிப்படையில் இணை போக்குவரத்து ஆணையர் சத்யநாராயணன் உத்தரவு பேரில், திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயகௌரி தலைமையில் ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இளங்கோ, சண்முக ஆனந்த், கருப்புசாமி, கமலா மெர்சி, தர் ஆகியோர் திண்டுக்கல், வத்தலக்குண்டு, கொடைரோடு, பழனி பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை ஆம்னி பஸ்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னை செல்லும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதிக ஆட்களை ஏற்றியது உட்பட பல்வேறு விதிமுறைகளை மீறிய 10 ஆம்னி பஸ்சுக்கு தலா ரூ.2,500 வீதம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் வரும் 7ம் தேதி வரை ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் தொடர்பாக சோதனை நடத்தப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
The post கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ்களுக்கு அபராதம் appeared first on Dinakaran.