கூடுதலாக ரூ.2.06 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள்: திருப்பூர், தூத்துக்குடியில் புதிய அரசு அருங்காட்சியகங்கள்; அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு

1 day ago 2

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கலை மற்றும் பண்பாடு அருங்காட்சியங்கள் மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் சாமிநாதன் வெளியிட்ட அறிவிப்புகள்:
*கலை பண்பாட்டு துறையின் வாயிலாக நிகழ்த்துக்கலை மற்றும் நுண்கலைத் திட்டங்கள் மேலும் விரிவாக செயல்படுத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள் நடத்தப்படும். இதற்கென ஆண்டொன்றுக்கு கூடுதலாக ரூ.2.06 கோடி நிதி ஒதுக்கீடு ெசய்யப்படும்.
*கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்படும். அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக கலை கல்லூரி அரசு கவின் கலைக் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனுக்காக திட்டங்கள் செயல்படுத்தப்படும். இத்திட்டங்களுக்காக ரூ.67.70 லட்சம் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
*தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் இயல், இசை, நாட்டியம், நாடகம் மற்றும் கிராமியக் கலைகளில் சிறந்து சாதனைப் படைத்த கலைஞர் ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.
*சென்னை தமிழ்நாடு அரசு இசை கல்லூரியில் புதிய இளங்கலை பட்டப்படிப்புகள் தொடங்கப்படும். தமிழ்நாட்டு அரசு இசை கல்லூரிகளில் வல்லுநர்கள் மூலம் சிறப்பு வகுப்புகள் மேற்கொள்ளப்படும். மேலும் தமிழ்நாடு இரசு இசைக் கல்லூரிகள் மற்றும் மாவட்ட அரசு இசை பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் கல்வி உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டங்களை செயல்படுத்திட கூடுதலாக ரூ.1.09 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
*ஜவகர் சிறுவர் மன்றங்களில் பணியாற்றும் பகுதி நேர பயிற்றுநர்கள் திட்ட அலுவலர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தினை உயர்த்தி வழங்கிட கூடுதலாக ரூ.42.84 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
*மாமல்லபுரம், அரசினர் கட்டிடக் கலை மற்றும் சிற்ப கலை கல்லூரியில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
*தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் நிருவாக பணிகள் மற்றும் கலை பணிகளுக்காக தற்போது ஆண்டொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் அரசின் நல்கைத் தொகை ரூ.3 கோடியிலிருந்து ரூ.4 கோடியாக உயர்த்தப்படும்.
*தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் வாயிலாக வழங்கப்படும் நலிந்த கலைஞர் நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள தகுதி வாய்ந்த அனைத்து கலைஞர்களுக்கும் நிதியுதவி வழங்கிட கூடுதலாக ரூ.9 கோடி நிதி ஒதுக்கப்படும்.
*தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழத்தின் இணையதளம் மேம்படுத்தப்படும். மேலும் மாணவர்களின் இசைத் திறனை மேம்படுத்த புதிய செயலி உருவாக்கப்படும்.
*சென்னை அரசு அருங்காட்சியகத்தின் புவியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் மானுடவியல் காட்சிக்கூடங்களை மேம்படுத்தி காட்சி அமைத்திட ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
*சென்னை அரசு அருங்காட்சியகம் தோற்றுவிக்கப்பட்டு 175 ஆண்டுகள் ஏப்ரல் 2026ல் நிறைவடைவதை முன்னிட்டு அருங்காட்சியக வளாகத்தினை மேம்படுத்திட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
*திருப்பூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் புதிய அரசு அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்.
*சென்னை அரசு அருங்காட்சியகத்தின் கலையரங்கத்திற்கு சிறப்பு ஒலியமைப்பு மற்றும் ஒளியமைப்பு சாதனைங்கள் நிறுவிட ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
*மதுரை அரசு அருங்காட்சியகக் காட்சிக்கூடங்களின் தரத்தினை உயர்த்தி தேனி அரசு அருங்காட்சியக வளாகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* மறைந்த எம்எல்ஏக்களுக்கு சட்டசபையில் இரங்கல்
தமிழக சட்டப்பேரவையில் நேற்று மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் டாக்டர் ஜெய்சன் ஜேக்கப், எம்.கந்தசாமி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மறைந்த எம்எல்ஏக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வகையில் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணித்துளிகள் அமைதி காத்தனர்.

The post கூடுதலாக ரூ.2.06 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள்: திருப்பூர், தூத்துக்குடியில் புதிய அரசு அருங்காட்சியகங்கள்; அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article