கூடலூர் வனக்கோட்டத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

4 hours ago 2

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானை, புலி, சிறுத்தை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முன்பு, பின்பு வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட முக்குருத்தி தேசிய பூங்கா, கூடலூர் வனக்கோட்டத்தில் ஓவேலி வனப்பகுதியில் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.

இந்த நிலையில் கூடலூர் வனக்கோட்டத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. கேமரா பொறிகளை பயன்படுத்தி புலிகள் மதிப்பீட்டு பயிற்சியின் 3-ம் கட்டம் வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து, கூடலூர் வனக்கோட்டத்தில் வருடாந்திர முதல் கட்ட புலிகள் கணக்கெடுப்பு பணிகள் கடந்த மாதம் 28-ந் தேதி முதல் வருகிற 5-ந் தேதி நடைபெற உள்ளது.

வருடாந்திர புலிகள் கணக்கெடுப்பு பணிகளில், புலிகள் எண்ணிக்கை மற்றும் வழித்தடங்களை கண்காணிப்பதே, இதன் முக்கிய நோக்கமாக உள்ளது. புலிகள் கணக்கெடுக்கும் பணிக்காக கூடலூர் கோட்டத்திற்கு உட்பட்ட 6 வனச்சரகங்களில் 27 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. வனச்சரகர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உள்பட மொத்தம் 90 கள பணியாளர்கள் புலிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் புலிகளை தொலைநோக்கி மூலம் நேரடியாக பார்வையிடுதல், எச்சங்கள், கால் தடங்கள் போன்றவை மூலம் கணக்கெடுத்து வருகின்றனர். கணக்கெடுப்பு முடிந்த பின்னர், அதன் அறிக்கை துறை ரீதியாக சமர்ப்பிக்கப்பட உள்ளது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Read Entire Article