கூடலூர் : கூடலூர் மண்ணுரிமை பாதுகாப்பு இயக்கத்தின் உயர்நிலை குழு கூட்டம் விடுதலை சிறுத்தைககள் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் அம்சா தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என் வாசு முன்னிலை வைத்தார். விசிக முன்னாள் மாவட்ட செயலாளர் சகாதேவன் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அனிபா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் முகமது கனி, சிபி எம் ஏரியா செயலாளர் சுரேஷ், மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் சாதிக் பாபு, மனிதநேய ஜனநாயக கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் அன்சாரி மக்கள் நீதி மைய மாவட்ட செயலாளர் எஸ்என்ஆர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கூடலூர் நிலப்பிரச்சினை மற்றும் கூடலூர் சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சியில் அரசின் செயல்பாடுகள், கூடலூர் மண்ணுரிமை பாதுகாப்பு இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டு கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
உதகையில், தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து கூடலூர் ஜென்ம நிலம் பிரிவு 17 பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக கடந்த ஜனவரி 30 ம் தேதி தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி, ஜென்ம நிலம் பிரிவு 17 ல் வாழும் மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் வரலாற்று சிறப்பு வாய்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக நேரில் நன்றி தெரிவிப்பது.
தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் போற்றும் வகையில் சிறப்பான ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல்வரின் திராவிட மாடல் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில அதிகாரிகள் வருவாய்த்துறை, வனத்துறை, ஊரக உள்ளாட்சிகள் மற்றும் நகராட்சி பேரூராட்சிகளில் அரசின் செயல் திட்டங்களை செயல்படுத்துவதற்கும் மக்கள் பிரச்னைகளையும் தீர்ப்பதற்கும் புதிய திட்டங்களை கொண்டு வருவதற்கும் முன் வராமல், அனைத்தையும் கிடப்பில் போட்டு மக்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாமலும், காலதாமதம் செய்தும், அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.
பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் அதிகாரங்களை கேலிக்கூத்தாக்கும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது. வனத்துறை அதிகாரிகள் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுப்பதற்கு பதிலாக அவைகளை ஊருக்குள் விட்டு அவைகளை கண்காணிக்கும் பணிகளையே செய்து வருகின்றனர்.
விவசாயிகளின் பயிர்கள் பொதுமக்களின் குடியிருப்புகள் மற்றும் உடைமைகள் காட்டு யானைகளால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. பலமுறை கட்சிகள் சார்பாகவும் ஆளும் கட்சியின் தோழமை கட்சிகள் இணைந்தும் பல போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியும், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் மக்கள் பல்வேறு பிரச்னைகளை தீர்ப்பதற்கு அதிகாரிகள் முன் வரவில்லை.
இந்நிலையில் தமிழக முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வரும் வருவாய்த்துறை வனத்துறை உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளை கண்டித்தும் அவர்கள் மீது கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் அரசு கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, மக்கள் நீதி மையம் ஆகிய கட்சிகள் இணைந்த கூடலூர் மண்ணுரிமை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வரும் 19 ம் தேதி திங்கட்கிழமை கூடலூர் புதிய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. கூட்ட முடிவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அனிபா நன்றி கூறினார்.
The post கூடலூர் மண்ணுரிமை பாதுகாப்பு இயக்கம் உயர்நிலை குழு கூட்டம் appeared first on Dinakaran.