கூடலூர்: தேனி மாவட்டம், கூடலூர் பகுதியில் பெரியாறு பாசனத்தில் இரு போக சாகுபடி நடந்து வருகிறது. தற்போது முதல் போக சாகுபடியில் வயல்களில் நெற்பயிர்கள் அறுவடை பணி துவங்கியது. கூடலூர் பெரியாற்று பாசனப்பகுதிகளில் நெல் விவசாயம் அதிகம் செய்யப்பட்டு வருகிறது. நெல் நாற்று நட்டு 90-100 நாட்கள் கடந்து அறுவடைக்கு தயாரான வயல்களில் நெற்பயிர்கள் அறுவடை பணி துவங்கியுள்ளது. அறுவடை செய்த நெற்கதிர்கள் 62 கிலோ எடை உள்ள மூடைகளாக போடப்படுகிறது. ஒரு குழிக்கு (60 சென்ட்) நூறு மூடைகள் வரை கிடைத்த மகசூல் புகையான் நோய் தாக்குதலால் தற்போது 80லிருந்து 90 மூட்டைகள் வரையே மகசூல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.மேலும் விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் சிறிய தொகை முன்பணம் செலுத்தி திருச்சி, காங்கயம், மதுரை உள்ளிட்ட அரிசி மில்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
அங்கே 10-15 நாட்களுக்குப் பிறகு அதற்குரிய தொகை கிடைத்த பின்னரே விவசாயிகளுக்கு மீதப்பணம் செட்டில் செய்யப்படுகிறது. ஆர்என்ஆர் வகை நெல் மூடை ரூ.1500 வரையிலும் என் எல் ஆர் வகை நெல் மூடை ரூ.1200 வரையிலும் கொள்முதல் செய்யப்படுவதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதுபோக தேனி மாவட்டத்தில் அதிக நெல் விளைச்சல் இருந்தாலும் மாவட்டத்தில் அரிசி மில்கள் சொல்லிக் கொள்ளும்படி இல்லாததால் வெகு தூரத்தில் உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பப்படுவதால் போக்குவரத்து செலவினங்களும் அதிகமாக ஆகிறது. எனவே தனியார் அல்லது அரசு அரிசி ஆலைகளை தேனி மாவட்டத்தில் கொண்டுவர மாவட்ட நிர்வாகமும் அரசும் முன் முயற்சி எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கூடலூர் பகுதியில் முதல் போக நெல் அறுவடை பணி துவங்கியது appeared first on Dinakaran.