கூடலூர், ஜன.24: கூடலூர்-ஊட்டி சாலையில் ராஜகோபாலபுரம் பழைய தங்கமணி தியேட்டர் பகுதியில் பாழடைந்த கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடம் கடந்த பல வருடங்களாக பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தில் உள்ளே விஷ ஜந்துக்களும் நடமாட்டமும் உள்ளன. இது எப்பொழுது வேண்டுமானாலும் சுவர்கள் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.
இந்தக் கட்டிடத்தை ஒட்டி இங்கு இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு செல்லும் சாலையும் உள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள நடைபாதை வழியாக தினசரி ஏராளமான பொதுமக்கள் நடந்து சென்று வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் மேல் கூடலூர் பகுதியில் உரிய பராமரிப்பு இல்லாமல் காணப்பட்ட கட்டிடம் ஒன்று மாலை நேரத்தில் திடீரென சரிந்து விழுந்தது.
அந்த நேரத்தில் யாரும் அப்பகுதியில் செல்லாததால் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை. இதே போல் இந்த கட்டிடத்தின் பாழடைந்த சுவர்கள் எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் நிலையில் உள்ளதால் வரும் மழைக்காலத்திற்கு முன்பாகவும் ஆபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பாகவும் சம்பந்தப்பட்ட துறையினர் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள மேற்கொள்ள வேண்டும் என பொது நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கூடலூர்-ஊட்டி சாலையில் பாழடைந்த கட்டிடத்தால் விபத்து ஏற்படும் அபாயம் appeared first on Dinakaran.