குழந்தையைத் தத்தெடுக்க விரும்புகிறீர்களா? இதைப் படிங்க!

1 month ago 10

உணவு, அவசர வாழ்க்கை, வேலை, ஆரோக்கியமற்ற வாழ்வியல் என குழந்தையின்மை பிரச்னை தற்போது அதிகரித்து வரும் சூழலில், பல தம்பதிகள் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஒரு குழந்தைக்குப் புதிய வாழ்க்கையையும், குடும்பத்தையும் அதிகளவு அன்பையும் கொடுக்கக்கூடிய கருணை மிகுந்த செயல்தான் தத்தெடுப்பு. இருந்தாலும் அதிலும் சில விதிகள் உள்ளன. குழந்தையை தத்தெடுப்பதற்கு முன்பு தம்பதிகளும், அவர்களின் குடும்பத்தினரும் மனத்தளவில் தயார்படுத்திக் கொள்வது முக்கியம். அரசாங்க விதிகள், சமூகப் பொறுப்புகள், பொருளாதார நிலை, தகுதி என பலவும் இதில் அடக்கம். ஆனால் அதற்கெல்லாம் முன்பு செய்ய வேண்டிய அல்லது தயார்படுத்த வேண்டிய நிலைகள் சில உள்ளன.

ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பது என்பது உங்கள் வாழ்நாள் முழுவதற்குமான அர்ப்பணிப்பு என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். தத்தெடுப்பதற்கு முன்பு அதில் உள்ள நன்மை, தீமைகள் குறித்து ஆராய வேண்டும். அந்த வகையில் ஒரு குழந்தையை தத்தெடுப்பதற்கு முன்பு நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.தத்தெடுப்பு எனும் செயல்முறையில் குழந்தைதான் முக்கியமான நபர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தத்தெடுத்த பின்பு குழந்தைக்கு நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும். குழந்தையின் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தத்தெடுத்த தம்பதிகள் மட்டு மின்றி, அந்த குடும்பத்தில் உள்ள மற்ற நபர்களும், குழந்தையின் மீதான புரிதல் இருக்க வேண்டியது அவசியம். வெறுமனே ஏன் குழந்தை இல்லை என்னும் கேள்விக்கான பதிலாக தத்தெடுத்தல் என்பது கூடாது. ஏனேனில் ‘குழந்தை இல்லாமல்’ எதிர்கொள்ளும் சவால்களை விட அதீத சவால்களை தத்தெடுத்த குழந்தைகளும், அவர்களின் பெற்றோர்களும் எதிர்கொள்வார்கள்.

முதலில் கணவன் – மனைவி இருவரும் 100% குழந்தைத் தத்தெடுப்புக்கு தயாராக இருக்க வேண்டும். ஒருவருக்குச் சங்கடம் இருந்தாலும் அது குழந்தையை பாதிக்கும். இருவரும் ஒன்றுக்கு ஆயிரம் முறை கூட யோசிக்கலாம். நீங்கள் தீர்க்கமாக முடிவெடுத்த பின்னர் வேறு யார் கேட்பார்கள் என்கிற நிலையும் ஆபத்துதான். காரணம் அடுத்து வரவிருக்கும் சுமார் 70 வருட காலத்தை உங்கள் குடும்பத்தார் மத்தியில்தான் கழித்தாக வேண்டும் என்கையில் நீங்கள் முடிவெடுத்த பின்னர் உங்கள் அப்பா, அம்மா உட்பட உங்கள் நெருங்கிய சொந்தங்கள் அனைவரையும் அழைத்து தகவல் கூறி, நம்மை நம்பி ஒரு குழந்தை வருகிறான் யாரும் அவனை/அவளை வெளியில் இருந்து வந்த குழந்தை என தனிமைப்படுத்த வேண்டாம் என்னும் கட்டுப்பாடுகளுடனும், மேலும் குழந்தையை தத்தெடுத்த அப்பா-அம்மா தவிர வேறும் யாரும் அந்தக் குழந்தை தத்து குழந்தை என்னும் தகவலைக் குழந்தைக்குச் சொல்லக் கூடாது என்கிற விதிகளும் சொல்லிவிட வேண்டும். காரணம் வளர்த்தவர்கள் ஒரு விஷயத்தைக் குழந்தையிடம் சொல்வதற்கும், மற்றவர்கள் சொல்வதற்கும் நிறைய வித்யாசம் உண்டு.

குழந்தை தத்தெடுப்பில் தற்போது பல மோசடிகள் நடக்கின்றன. ஒரு குழந்தையை தத்தெடுக்கும் முன்பு, அது பற்றிய விஷயங்களை முழுமையாக ஆராய்வது அவசியம். ஏஜென்சிகள் மூலம் தத்தெடுக்க திட்டமிட்டிருந்தால் அந்த ஏஜென்சி உண்மையானதா என்பதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் மற்ற வகையிலும் தொடர்புகொள்ளலாம். அந்த ஏஜென்சிக்கு நேரில் சென்று அது செயல்படும் விதம் மற்றும் அதன் உண்மைத்
தன்மையை ஆராய வேண்டும்.தத்தெடுக்க நினைக்கும் குழந்தை இதுவரை வளர்ந்த சூழலும், இனி வளரப்போகும் சூழலும் வெவ்வேறாக இருக்கும். பழைய சூழலில் இருந்து உடனடியாக வெளிவந்து, புதிய சூழலை ஏற்றுக் கொள்வது என்பது குழந்தைக்கு சற்றே கடினமானது என்பதை தம்பதிகள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைக்கு மட்டுமின்றி, தம்பதிக்கும் இது புது உணர்வுதான். இதனால் ஆரம்பத்தில் குழந்தைக்கும், தம்பதியருக்கும் இடையே இடைவெளி உண்டாகலாம்.

தத்தெடு்ப்பதற்காக ஒரு குழந்தையை தேர்வு செய்யும் முன்பு அக்குழந்தையைப் பற்றியும், அதன் மருத்துவப் பின்னணியைப் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம். மேலும் குழந்தையின் வருகை, அதன் குடும்பப் பின்னணி என்ன என்பதும் அவசியம். தத்தெடுக்கும் நபரின் தற்போதைய குடும்ப உறுப்பினர் அடங்கிய படம், ஆதார் அட்டை, வெளிநாட்டினராக இருந்தால் பாஸ்போர்ட் இருப்பிடச் சான்று, தத்தெடுக்கும் ஆண்டிற்கு முந்தைய ஒராண்டின் வருமானச் சான்று, தம்பதிகளாக இருந்தால் இருவாின் உடல் நிலை குறித்து முழு மருத்துவச் சான்று, தம்பதி என்பதற்கான திருமணப் பதிவுச் சான்று, விவாகரத்து ஆன நபரென்றால் அதற்கான சான்று, துணை இறந்திருந்தால் அதற்கான இறப்புச் சான்று, குடும்ப உறுப்பினரிடம் இருந்து தத்தெடுப்பதாக இருந்தால் அதற்கான முறையான சம்மதம், 2-வது குழந்தையாக தத்தெடுக்க நினைத்தால் முதல் குழந்தையின் சம்மதம் என இவையனைத்தும் அவசியம். இதற்கு பிறகு கூடுமானவரை குழந்தைத் தத்தெடுப்பை அரசு சார்ந்த அமைப்புகள் மூலம் செய்வது பாதுகாப்பானது. பணம் வாங்கிக்கொண்டு குழந்தைகளைக் கொடுக்கும் தனியார் மையங்களை நம்ப வேண்டாம். ஒரு மரம் அல்லது செடி வைத்தாலே வளரும் வரை நமக்கு ஆயிரம் கடமைகள் இருக்கும் போது குழந்தை வளர்ப்பு குறித்த புரிதல் மிக அவசியம். அதேபோல் குழந்தைத் தத்தெடுப்புக் குறித்த புரிதல் அதை விட அவசியம்.
– அ.ப.ஜெயபால்.

 

The post குழந்தையைத் தத்தெடுக்க விரும்புகிறீர்களா? இதைப் படிங்க! appeared first on Dinakaran.

Read Entire Article