ஜோதிட பலன்களைப் பற்றி புரிந்து கொள்ளாதவர்கள் பலர் இருக்கிறார்கள். அதைவிட தவறாகப் புரிந்து கொண்டவர்கள் அதிகம். தவறாகப் புரிந்து கொண்டவர்களால் ஏற்படும் விபரீதம் ஜோதிட சாஸ்திரத்திற்கே விரோதம் என்று சொல்லலாம். பரிகாரம் என்ற பெயரில் செய்யப்படும் சில நிகழ்வுகளால் சில குடும்பங்கள் படுகின்ற துன்பங்கள், தற்கொலை வரைகூட போய் விடுகிறது. ஒருவனுக்குச் சாதகமான பலன்களை மட்டும்தான் சொல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை என்றாலும்கூட, சாதகம் இல்லாத பலன்களைச் சொல்லும்போதுகூட, அவருடைய மனது இற்றுப் போய் விடாமல், உணர்வுகள் கெட்டுப் போய் விடாமல், உற்சாகம் வடிந்து போய்விடாமல், ‘‘விரைவில் நல்ல காலம் பிறக்கும். ஜாதக ரீதியாக கிரகங்கள் சரியில்லை என்றாலும்கூட, கொஞ்சம் எச்சரிக்கையோடு இருந்தால், முயற்சிக்கு தகுந்த பலன் கட்டாயம் கிடைக்கும்’’ என்று ஊக்குவிப்பதுதான் ஒரு ஜோதிடருடைய பணியாக இருக்க வேண்டும்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். ‘‘நான் ஒரு ரசிகன்’’ என்ற அந்த புத்தகம் அவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அவரே சொல்வது போல் அமைந்திருக்கிறது. அவருடைய இளமைக்காலம் எப்படி இருந்தது. அவரே எழுதுகின்றார். படியுங்கள்.
‘‘எனக்கு மூணரை வயசு ஆகும்போது அப்பாவுக்குத் திடீர்னு உடம்பு சரியில்லாம படுத்துட்டாரு. அப்ப திருச்சியில என்னோட தாய்மாமா இருந்தாரு. அப்பாவுக்கு நல்ல ட்ரீட்மெண்ட் தரலாம்னு திருச்சிக்கு எல்லோரும் போனோம். ஆனா, அப்பாவைக் காப்பாத்த முடியலை. ‘விதி’யோடு விளையாட வேற யாரும் கிடைக்கலையோ என்னமோ, என்னோட ஆட ஆரம்பிச்சுது. அப்பா இறந்துபோன துக்கம்கூட ஆறலை. பதினஞ்சு நாளைக்குள்ள என் தங்கை அப்பாவைத் தேடிப் பறந்து போயிட்டா. இப்படி எங்க குடும்பத்துல ரெண்டு பேர் அடுத்தடுத்து இறந்ததுல, எனக்கும் துக்கம் தொண்டையை அடைக்கும். அழுகை பொத்துக்கிட்டு வரும்கிறதை யாருமே உணரலை. மாறாக, ‘அப்பனையும் தங்கச்சியையும் முழுங்கிட்டு நிக்கிற துக்கிரிப் பயல் இவன்’னு எங்களுக்குச் சம்பந்தமில்லாதவங்ககூட என்னைத் திட்டுவாங்க… தலையில் அடிப்பாங்க. அந்தச் சமயத்துல கண்டவன்கிட்டல்லாம் நான் அடி வாங்கினதை இப்ப நினைச்சாக்கூட அழுதுடுவேன்.
ஆம். ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்த வீட்டிலே ஏதேனும் துக்க நிகழ்வு நடந்துவிட்டால், அந்த துக்க நிகழ்வுக்கு அந்த குழந்தையின் பிறப்பும் ஜாதகமும்தான் காரணம் என்று சொல்லுகின்ற வழக்கம் இன்றைக்கும் இருக்கிறது.
அதற்குத் தகுந்தாற்போல் ஜோதிடர்கள் ஒரு குழந்தையின் ஜாதகத்தைக் கணிக்கின்ற பொழுது, இந்த குழந்தையால் இன்னின்னார்க்கு ஆபத்து என்றுகூட பட்டியல் போட்டுக் கொடுத்து விடுகின்றார்கள். அவர்கள் வீட்டில் யாரோ ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து, குழந்தை பிறந்தவுடன் அவர்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால், அதை இந்த குழந்தையின் ஜாதகத்தோடு இணைத்து இந்த நட்சத்திரத்தில் குழந்தை பிறந்ததால்தான் இப்படி ஆகிவிட்டது, இந்த லக்கினத்தில் குழந்தை பிறந்ததால்தான் இப்படி ஆகிவிட்டது, இந்த குழந்தை பிறந்த நேரம் சரியில்லாததால்தான் இப்படி ஆகிவிட்டது, என்று சொல்லுகின்ற ஜாதகத்தைப் பற்றி எதுவும் அறியாத கூட்டம் ஒன்று இருக்கிறது.
முதலில், ஜாதகம் என்பதை என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். அது ஒவ்வொருவருக்கும் தனியானது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஜாதகத்தின் கஷ்ட நஷ்டங்கள் இன்னொரு ஜாதகத்தினால் பாதிக்கப்
படுவது கிடையாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால், ஒன்று ஐ.ஏ.எஸ் படிக்கும், இன்னொரு குழந்தை எதற்கும் பிரயோஜனம் இல்லாமல் ஏதாவது ஒரு கடையில் கூலிக்கு வேலை செய்து கொண்டிருக்கும். இரண்டும் இரண்டு விதமான வினைப் பயனை அனுபவிப் பதற்காக வந்தவர்கள் என்பதைத்தான் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, ஒரு ஜாதகத்தால் இன்னொரு ஜாதகம் கெட்டுப் போய்விட்டது என்று சொல்லக் கூடாது. சொல்ல முடியாது. சொல்வது சாஸ்திர விரோதம்.
ஒரு குழந்தை, பிறந்த 10 நாள்களில் அந்த வீட்டில் ஏதேனும் ஒரு அசுப காரியம் நடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். கோடானு கோடி மக்கள் உள்ள நாட்டில், இப்படி எல்லாம் நடக்கச் செய்யும். இந்தக் குழந்தை பிறந்ததால் அந்த ஜாதகத்திற்கு அப்படிப்பட்ட பலன் நடக்கவில்லை. இந்த குழந்தை பிறக்காமல் இருந்தாலும், விதிப்படி அது அந்த தேதியில் முடிந்து போயிருக்கும் என்பதுதான் உண்மை.
இன்னும் நுட்பமாகச் சொல்பவர்கள், இந்த குழந்தை பிறப்பையும் அந்த மரணத்தையும் இணைத்துச் சொல்லலாம். அது நடந்தே ஆக வேண்டிய இரண்டு சம்பவங்களை இணைத்துச் சொல்லப் படுவது தானே தவிர, ஒரு சம்பவத்தால் இன்னொரு சம்பவம் நிகழ்வதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு ஜோதிடர், மிகவும் திறமையாக இந்த குழந்தை பிறந்தவுடன் ஒரு சில நாள்களில் இவருக்கு ஆபத்து. அப்படித்தான் ஜாதகம் இருக்கிறது என்று முதல் ஜாதகத்தை வைத்துச் சொல்லிவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். உடனே புத்திசாலித்தனமாக இந்த குழந்தையின் பிறப்பை தள்ளி வைத்து விட்டாலோ அல்லது இல்லாமல் செய்து விட்டாலோ அந்த உயிரைக் காப்பாற்றி விடலாம் என்று நினைத்தால் அது தப்பு கணக்கு.
வராஹமிகிரர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இந்த விஷயத்தை தெளிவாக்கும். மத்திய பாரதத்தின் அவந்தியில் பிறந்தவர் வராஹமிகிரர். இளம் வயதில், மகதப் பேரரசின் குசும்புரா சென்ற மிகிரர், அங்கு ஆரியபட்டரைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பு, மிகிரரின் உள்ளத்தில் வானியலில் சாதனை படைக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது.
மாளவ ராஜ்ஜியத்தில் குப்தப் பேரரசின் இறுதிக் காலத்தில் ஆட்சி புரிந்த யசோதர்ம விக்கிரமாதித்தனின் அரசவை நவரத்தினங்களுள் ஒருவராக மிகிரர் பணிபுரிந்தார். வெகு காலம் கழித்து, அந்த மன்னனுக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தையின் ஜாதகத்தைக் கணித்த மிகிரர், அவன் இளம் வயதிலே ஒரு பன்றியால் மாண்டுபோவான் என்று கணித்தார்.
அதை மன்னன் ஏற்கவில்லை. பலத்த பாதுகாப்புடன் அவன் வளர்க்கப்பட்டான். ஊரில் உள்ள அத்தனை பன்றிகளையும் அரண் மனைக்கு அருகில் வரவிடாமல் தடுத்தான்.
சிலவற்றைக் கொன்றான். எப்பொழுதும் தன்னுடைய குழந்தைக்கு மிகச் சிறந்த பாதுகாப்பை தந்து கொண்டிருந்தான். அரண்மனையைச் சுற்றி பன்றியே இல்லாத போது, பன்றியால் மகனுக்கு எப்படி இறப்பு ஏற்படும் என்று மன்னன் எண்ணினான்.
அரசனின் மகன் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்த பொழுது, அரண்மனை தூண் மேலே பொருத்தப்பட்டிருந்த ஒரு பதுமை உடைந்து மன்னன் மகனின் தலையில் விழுந்து மாண்டு போனான். அந்தப் பதுமை ஒரு பன்றியின் முகம் கொண்ட பதுமை. அப்போது, ஜோதிடத்தின் சிறப்பை உணர்ந்த மன்னன், மிகிரருக்கு குப்தப் பேரரசின் ‘‘வராஹ’’ என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தான். அதன் பிறகு அவர் வராஹமிகிரர் என்று அழைக்கப்பட்டார். ஒரு சம்பவம் நல்லதோ கெட்டதோ அதற்குரிய வினையின் பயனாகத்தான் நடக்கிறதே தவிர, வேறு ஒருவரால் அந்த சம்பவம் நடப்பதில்லை.
ஒரு ஜாதகத்தின் பலனை இன்னொரு ஜாதகத்தின் பலன் தீர்மானிக்காது என்பதைப் புரிந்து கொள்வதற்காகத்தான் இந்தக்கட்டுரை.
The post குழந்தையின் ஜாதகத்தைக் கணிக்கும் போது இப்படி பலன் சொல்லாதீர்கள் appeared first on Dinakaran.