நன்றி குங்குமம் தோழி
– எழுத்தாளர் தீபலட்சுமி
மூலப் பிரதியை வாசிப்பதுபோன்ற உணர்வை, ஒரு மொழிபெயர்ப்பு புத்தகமும் கடத்தினால், அதுதானே மொழிபெயர்ப்பாளரின் வெற்றி. அப்படியான ஒரு சாதனையை சமீபத்தில் நிகழ்த்தி இருப்பவர் தீபலட்சுமி. இவர் எழுத்தாளர் ஜெயகாந்தனின் மகள். அமெரிக்கப் புலனாய்வு எழுத்தாளரான ஜான் லீ ஆண்டர்சன், ஆங்கிலத்தில் 800 பக்கங்களில் எழுதிய புத்தகம் Che Guevera A Revolutunary Life. இதனை “சே குவேரா ஒரு போராளியின் வாழ்க்கை” என்ற பெயரில் தமிழுக்கு மொழிபெயர்த்து இருக்கிறார் இவர். 1300 பக்கங்கள் கொண்ட இவரின் மொழிபெயர்ப்பை இரண்டு புத்தகங்களாக பாரதி புத்தகாலயம் சமீபத்தில் வெளியிட்டது. சேவின் வாழ்க்கை, புரட்சியாளனாக அவர் மாறியது, துப்பாக்கி குண்டுகளால் துளைத்து அவர் கொல்லப்பட்டது, காணாப் பிணமாய் ஆக்கப்பட்ட சே வின் எலும்புகளை தேடிக் கண்டுபிடித்துக் கொண்டுவந்த நிகழ்வென மொழிபெயர்ப்புக்காக இவர் செலுத்திய அர்ப்பணிப்பு குறித்தெல்லாம் அவரிடம் பேசியதில்…
உங்களைப் பற்றி முதலில் சொல்லுங்கள்?
சிவில் இஞ்சினியரிங் முடித்து ஐ.டி துறையில் இருக்கிறேன். அப்பா பிரபல எழுத்தாளர் என்றாலும், அப்பாவின் எழுத்துப் பயணமும் எங்கள் வாழ்க்கையும் முற்றிலும் வேறானதாகவே இருந்தது. அப்பாவோடு கூட்டங்களுக்குச் செல்வது, இலக்கிய சந்திப்புகளில் கலந்து கொள்வது போன்ற எந்த அனுபவமும் எனக்கு கிடையாது. ஆனால் 8 வயதில் இருந்தே வாசிப்பு பழக்கம் இருந்தது. ஆங்கில இலக்கியங்கள், பிறமொழி இலக்கியங்களையும், அப்பாவின் சிறுகதைகளையும் நிறைய வாசித்திருக்கிறேன். இந்த வகையில், ஒரு வாசகியாக அப்பாவைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கிறேன்.
எழுத்துத் துறைக்குள் நான் நுழைந்ததற்கான முதல் படியாக அமைந்தது வலைப் பூக்கள். இதில் ஆங்கிலத்தில் படித்த சில கதைகளை தமிழுக்கு மொழியாக்கம் செய்து பதிவிட ஆரம்பித்தேன். என் மொழிபெயர்ப்புக் கதைகள் சில பத்திரிகைகளிலும் வெளியானது. எழுத்து பிடிக்கவே, முகநூலிலும் தொடர்ந்து எழுதினேன். ஒரு சில தொடர்களை பத்திரிகைகளில் எழுதும் வாய்ப்பு வந்தது. எனது கட்டுரைகள் தொகுக்கப்பட்டு புத்தகங்களாகவும் வெளியாயின. அப்பாவுடைய பத்து சிறுகதைகள் மற்றும் ஒரு குறுநாவலை அவரின் அனுமதியோடு தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தேன்.
சே குவேரா புத்தகத்தை மொழியாக்கம் செய்யும் பணி எப்படி அமைந்தது?
ஜோயல் ஆன்ட்ரியாஸ் எழுதிய Addicted To War காமிக்ஸ் புத்தகத்தைத் தமிழுக்கு மொழிபெயர்த்தேன். ஒரு சில காரணங்களால் அது வெளிவரவில்லை என்றாலும், இடதுசாரி அரசியலை உள்வாங்கும் பாதையை அது அமைத்துக் கொடுத்தது. இடதுசாரி சிந்தனையாளர்கள் சிலரின் நட்பிலும் இருந்தமையால், தோழர் செல்வா மூலம் சே குவேரா வாழ்க்கை குறித்த இந்த புத்தகம் தமிழ் மொழிபெயர்ப்புக்காக என்னிடம் வந்தது.
சே வைத் தேடி பயணித்த ஜான் லீ ஆண்டர்சன் பயணம் எப்படியானதாக இருந்தது?
சே இறந்தது 1967. புத்தகம் வெளியானது 1997. சேவின் மரணத்துக்குப் பின்னால் பல்வேறு கதைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட நிலையில், சே பயணித்த லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு எல்லாம் ஆண்டர்சன் பயணித்து, சே சந்தித்தவர்களை எல்லாம் சந்தித்து, அவர்களிடம் இருந்த சே வின் கடிதங்கள், குடும்ப உறுப்பினர்களான அவரின் அப்பா, நண்பர்கள், குழந்தைகள், அவரின் முதல் மற்றும் இரண்டாவது இணையர், இவர்களுக்கு எழுதிய கடிதங்கள், பிடலுக்கு எழுதிய கடிதம், டைரி குறிப்புகள், துண்டுச் சீட்டில் அவர் எழுதி வைத்திருந்ததை சேகரித்தது, இவற்றுடன் க்யூபாவின் ஆவணக் காப்பகம், அர்ஜென்டினா, க்யூபா, பொலிவியாவில் அவரைப் பற்றிய தரவுகளை சேகரித்து, எப்படியான உண்மையான மனிதராக இருந்தார் என்பதை தன் புத்தகத்தில் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளார்.
குழந்தைப் பருவத்தில் எர்னஸ்டோவாகத் தொடங்கி, சே குவேராவாகப் பரிணமித்து, புரட்சியாளனாக மாறி, பொலிவியாவில் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு கொல்லப்பட்டது வரை உள்ள அத்தனை நிகழ்வுகளுக்கும் ஆவணங்களைத் தேடிப் பயணித்து, கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கடும் உழைப்பை செலுத்தியே இந்த நூலை கொடுத்திருக்கிறார். தான் திரட்டிய ஆதாரங்களைச் சரியான இடங்களில் பொருத்தியது, படிக்க சுவாரஸ்யமான நடையில் நூலை எழுதியிருப்பது மற்றும் பல அடிக்குறிப்புகள் வழியாக நமக்கு எழும் சந்தேகங்களுக்கு, நம்மோடு அவரே உரையாடுவது போன்ற தீர்வைத் தருவதே புத்தகத்தின் சிறப்பு. சே பொலிவியாவில் சிறைப்பிடிக்கப்படும்போது, அவரிடம் கைப்பற்றப்பட்ட கேமராவில் கடைசியாக அவர் எடுத்த புகைப்படங்களும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
சே வாழ்க்கையில் ஜான் லீ ஆண்டர்சன் எந்தளவு முக்கியத்துவம் பெறுகிறார்?
சே மற்றும் லத்தீன் அமெரிக்கப் புரட்சியையும் மிகச் சரியாகப் புரிந்துகொண்டு ஆவணப்படுத்திய எழுத்தாளராகவே அவரை உணர்கிறேன். அவர் ஒரு இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிஸ்ட். கூடவே
பிரிலியன்ட் ரைட்டர். சே குறித்த தரவுகளை இவர் சேகரிக்கும் போது, பொலிவியா ராணுவத்தால் காணாப் பிணமாக்கப்பட்ட சே மற்றும் அவருடைய புரட்சிப்படைத் தோழர்கள் கொல்லப்
படக் காரணமாக இருந்த, ராணுவ ஜெனரலின் மனைவியை சந்தித்து, அவரின் டைரியை பெற்று, அதிலிருந்த குறிப்புகள் வழியாக சே புதைக்கப்பட்ட இடத்தை தேடிக் கண்டுபிடித்து, சேவின் எலும்புகளையும், அவரோடு புதைக்கப்பட்டவர்களின் எலும்புகளையும் மீட்டெடுத்து க்யூபா கொண்டுவந்து உலக செய்தியானதற்கு, ஜான் லீ ஆண்டர்சன் மிக முக்கியக் காரணம். அந்தத் தகவல் இந்தப் புத்தகத்தில் உள்ளது. 1998ல் ஃபிடல் தலைமையில், சே குவேரா இறுதி மரியாதை நிகழ்வு மீண்டும் க்யூபாவில் நடத்தப்பட்டது.
சே எப்படி சிறந்த புரட்சியாளராக மாறினார்?
சேகுவேரா என்றால் இளைஞர்களுக்கு ஆதர்ச நாயகன். ஒரு ஹீரோ. அவரின் முகம் பதித்த டி-ஷர்ட், தொப்பி, சிகை அலங்காரம் இதுமட்டுமே சேவின் அடையாளமா என்றால்? இல்லை. உள்ளுக்குள் அவர் என்னவாக இருந்தார் என்பது அதைவிட வசீகரமானது. சே தீவிர வாசிப்பு பழக்கம் உள்ளவர். மார்க்சிய தத்துவத்தை முழுமையாக உள்வாங்கியவர். சின்ன வயதில் இருந்தே அடையாளத்தை உடைப்பவராகவும், கட்டமைப்புகளை மீறுபவராகவும் இருக்கின்றார்.
தோழமை உணர்வு மிக்கவர். வறுமையில் இருக்கும் இளைஞர்கள் மற்றும் ஜெர்மனியின் நாசிஸ் என ஒதுக்கப்பட்ட இளைஞர்களோடும் சேவுக்கு நட்பு இருக்கிறது. எல்லைகள் கடந்த சோசலிச சமூகத்தை உருவாக்க கனவு கண்டவர். எந்தெந்த நாடுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோரப்பிடியில் இருக்கிறதோ, அந்த நாடுகளை விடுவிக்கும் சிந்தனையில் ஃபிடலுடன் இணைந்தவர். க்யூபா புரட்சிப் படையில் இணைந்தபின், சொல் ஒன்று செயல் ஒன்றாய் இல்லாமல், தனி மனித ஒழுக்கத்திற்கு இலக்கணமாக, எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர்.
சே அரசியல் புரிந்தவர்களுக்கு அவரின் தோற்றத்தை தாண்டியும் அவரைப் பிடிக்கும். ஒரு புரட்சிகர மருத்துவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை எழுதியவர். தனது வாழ்வில் நடந்தவற்றை நாட்குறிப்பில் எழுதியும், புகைப்படங்களாக கேமராவிலும் பதிவு செய்தவர்.
சேவாழ்க்கையை மொழியாக்கம் செய்த போது உங்களின் உணர்வு?
விலை மதிக்க முடியாத நபர் சே. அவரின் செயல்கள் பல நம்மை ஆட்கொள்ளும். 30 வயதில் க்யூபாவின் தொழில்துறை அமைச்சராக இருந்த போதே உலகப் புகழ் அடைந்தவர். க்யூபா புரட்சியை வென்ற போது 33 வயது, சே கொல்லப்பட்ட போது 39 வயது. அவரின் காங்கோ புரட்சி தோல்வி நம்மையும் நொறுக்கிப் போடும். அழுது கொண்டே மொழியாக்கம் செய்த இடங்கள் இதில் பல உண்டு. சே சாவைத்தேடி பொலிவியாவிற்கு சென்ற நாட்களை கண்ணீர் மல்க எழுதினேன். ஆயுதப் புரட்சியைத் தேர்ந்தெடுத்து, மிக விரைவில் உயிரை விட்டது, மிகப்பெரிய இழப்பு என்பதே எனது எண்ணம். புத்தகத்தை முடித்த போது அவர் இறந்துவிட்டார் என்ற தாக்கமும், மிகப்பெரிய வெறுமையும் இருந்தது.
சே வின் இரண்டு இணையர்கள் குறித்து?
முதல் மனைவியான ஹில்டாவும் அரசியல் செயல்பாடுகளில் தீவிரம் காட்டியவர். தீவிர வாசிப்பாளர். சே வும் அவரும் இணைந்தே பயணித்து, இயக்கங்களில் வேலை செய்தவர்கள். ஹில்டாவை விட சே வயதில் இளையவர். திருமணம் செய்து கொண்டு அவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தையும் பிறந்தது. ஆனால் சே வின் இலக்கு புரட்சியாக இருந்தது. ஹில்டாவின் சம்மதத்துடனே க்யூபாவுக்குக் கிளம்புகிறார். புரட்சிப் படைகளில் அப்போது பெண்களும் இருக்கிறார்கள். ஃபிடலின் ஜூலை 26 இயக்கத்திலும் பெண்கள் முன்னிலை வகித்தார்கள். போராட்டக் களத்தில் அலைடாவை சந்திக்கும் சே காதல் வயப்படுகிறார். ஹில்டாவின் ஒப்புதேலோடு அலைடாவை திருமணம் செய்துகொள்கிறார்.
மொழியாக்கத்தில் தங்களுக்கு இருந்த சவால்கள்?
இதில் என் குடும்பத்தைப் பற்றி முக்கியமாகச் சொல்ல வேண்டும். இது மிகவும் முக்கியமான புத்தகம். இதை நீ மொழியாக்கம் செய்வது சிறப்பு எனச் சொல்லியதுடன், தினமும் என்னை ஊக்குவித்தவர் என் இணையர். பள்ளியில் இருந்து திரும்பியதுமே, “அம்மா இன்று எத்தனை பக்கங்கள் முடித்தீர்கள்” என என் குழந்தைகளும் கேட்க ஆரம்பித்தார்கள். ஒரு நாளைக்கு
5 பக்கம் என யோசித்து 4 மாதத்தில் முடிக்க நினைத்தேன்.
ஆனால் 9 மாதங்கள் எடுத்தது. புத்தகத்தை முழுவதும் முடித்து திருத்தம் செய்வதெல்லாம் இயலாத காரியம் என்பதால், மொழியாக்கம் செய்யும் போதே அவற்றையும் செய்தேன். ஸ்பானிஷ் வார்த்தைகள் அதிகம் இருந்ததால், அவற்றை தமிழுக்கு மொழியாக்கம் செய்வது கொஞ்சம் கடினமாக இருந்தது.
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
The post புலனாய்வில் கிடைத்த சே வின் புரட்சி வாழ்க்கை! appeared first on Dinakaran.