குழந்தைகள் நலம் காக்கும் சஷ்டி தேவி

2 months ago 13

முருகப்பெருமான் சூரனை வதம் செய்த நாளே கந்தசஷ்டி எனப்படுகிறது. சஷ்டியில் விரதமிருந்து அகப்பையாகிய கருப்பையில் கருவைத் தாங்கியோர் ஏராளம். ஆறுமுகரை வழிபட்டால் வாழ்வில் எந்தக் குறையும் வராது, வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை. ஆனால் சரவணன் தரும் சந்தான செல்வத்தை குறை ஏதும் வராமல் காப்பவள் சஷ்டி தேவி. குமரேசன் தாள்பற்றி குழந்தைவரம் பெறலாம் என்றாலும், அன்னை சஷ்டி தேவியே பரிந்துரைத்து அந்த பாக்கியத்தை பெற்றுத்தருகிறாள் என்கின்றன புராணங்கள்.

குழந்தைகள் நலம் காக்கும் தாயாகத் திகழும் சஷ்டி தேவி, முருகனது தேவியாகிய தெய்வானையின் அம்சமாகத் தோன்றியவள் என்றும், சஷ்டி தேவியே சண்முகனை மணக்க மனம்கொண்டு தேவசேனாவாக வடிவெடுத்தாள் எனவும் இருவிதமான கருத்துகள் உண்டு.

அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் யுத்தம் நடந்த காலகட்டம், முருகப் பெருமான் தேவர்களின் படைத்தலைவனாக பொறுப்பேற்று வீரத்திருக்கோலம் பூண்டு களமாடினார். அந்த நேரத்தில் மருமகனான முருகனின் வீரத்தையும் அழகையும் கண்டு மகிழ்ந்த மகா விஷ்ணு ஆனந்தக்கண்ணீர் சிந்த, அது ஒரு பெண்ணுரு கொண்டது. பெருமாளின் ஆனந்தக்கண்ணீரிலிருந்து தோன்றியதால் மக்களுக்கு ஆனந்தத்தையும், நலத்தையும் அருள வல்லவள் என்று மகாலட்சுமியால் ஆசிர்வதிக்கப்பட்டாள் அந்தப் பெண். அமாவாசை முடிந்த ஆறாம் நாள் தோன்றியதால் இவளுக்கு சஷ்டி என்றே பெயர் சூட்டப்பட்டது.

வெள்ளையானையான ஐராவதம் அப்பெண் குழந்தையை எடுத்துவந்து தேவேந்திரனிடம் அளிக்க, இந்திரனும், இந்திராணியும் சஷ்டி தேவியை தங்களது மகளாகப் பேணி வளர்த்தனர். மிகுந்த வீரம் உடைய சஷ்டி தேவி, தேவர்கள் படையில் இருந்து யுத்தம் செய்தாள். அசுர கணங்கள் தோல்வி அடைந்து ஓடின. வெற்றியைக் கொண்டாடும் விதமாக சரவணனுக்கு மாலைகள் சூட்டி, 'அரோகரா' என்று கோஷமிட்டு வாழ்த்தினார்கள் அனைவரும். தேவர்கள் யாவரும் தத்தமது பரிசுகளை வழங்கி வாழ்த்திய சமயத்தில் இந்திரன், தனது மகளான சஷ்டி என்கிற தேவசேனாவை குமரக் கடவுளுக்கு திருமணம் செய்து தருவதாக கூறினார். முருகனுக்கு மிகவும் பிரியமானவள் சஷ்டி. போர்க்கோலத்தில் இருந்த சஷ்டியை மணப்பெண்ணாக அலங்கரித்தாள் மகாலட்சுமி தேவி.

தேவர் சேனையில் இணைந்து போரிட்டதால், சஷ்டி தேவிக்கு 'தேவ சேனா' என்ற பெயரும் வந்தது என்றொரு புராணக்கதை சொல்கிறது.

பொன்னாபரணங்கள், அழகான ரத்தினக் கிரீடம், இடுப்பிலே பல மணிகள் கொண்ட மேகலை, புஜங்களிலே தோள் வளைகள், கைகளிலே வைர நவமணி வளையல்கள், கால்களில் அழகான வெள்ளிக் கொலுசுகள் என அணிந்து அழகே உருவாக நின்ற தேவசேனாவின் வளைக் கரத்தை தனது தெய்வீகத் திருக்கரத்தால் பற்றி திருமங்கல நாணிட்டு மாலைசூட்டி மணம் செய்து கொண்டார் மயில்வாகனன்.

இதை நினைவூட்டும் வகையில் சூரசம்ஹார நிகழ்ச்சியின் நிறைவாக தெய்வானை திருக்கல்யாணம் நடத்தப்படும் வழக்கம் வந்தது.

மிகவும் பழமையான காலம் தொட்டே சஷ்டி தேவி வழிபாடு இருந்திருக்கிறது. இதனை பத்மபுராணம், யாக்ஞ்யவல்கிய ஸ்மிரிதி போன்ற நூல்கள் மூலமாக அறியலாம். பெண்களுக்கு குறிப்பாக கர்ப்பிணிகளுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிப்பவள் சஷ்டி தேவி. குழந்தைகள் கருவாக உருவாவது முதல், பதினாறு வயது வரும் வரை சஷ்டியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள், திருஷ்டி, தோஷம், பயக்கோளாறு போன்றவற்றை நீக்குபவள் சஷ்டி தேவியே. 

Read Entire Article