டெல்லி: 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யக் கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் ‘ஜெப்ட்’ அறக்கட்டளை சார்பில் மூத்த வழக்கறிஞர் மோஜினி பிரியா என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதால் இளம் மனங்களில் ஏற்படும் உடல், மனநல பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. மேலும், 13 முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் அவற்றைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வயது சரிபார்ப்பு மற்றும் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை கட்டாயமாக்க வேண்டும். அதேபோல், குழந்தைகளின் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாத சமூக ஊடகங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும்’ என்று கோரியிருந்தார். இந்த மனுவுக்கு பதிலளித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மாஷி ஆகியோர் அமர்வு, ‘13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யக் கோரிய மனுவை விசாரிக்க முடியாது. மனுதாரர் நாடாளுமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்துகிறோம். இவ்விவகாரம் சட்டத்தின் வரம்பிற்குள் வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் முறையிடுங்கள். அதை அவர்கள் 8 வாரங்களுக்குள் பரிசீலிக்க வேண்டும்’ என்று கூறினர்.
The post குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை கோரிய மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு appeared first on Dinakaran.