
குழந்தைகள் படிப்பின் மீது மட்டுமே நாட்டம் கொண்டால் போதுமானது என்ற எண்ணம் பெரும்பாலான பெற்றோரிடத்தில் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் படிப்பு மட்டுமே அவர்களை திறமையானவர்களாக வளர்த்தெடுக்காது.
நாளுக்கு நாள் போட்டிகள் அதிகரித்துக்கொண்டிருக்கும் உலகில், படிப்புடன் கூடுதல் திறமைகளை வளர்த்துக்கொள்வது அவசியமானது. எனவே, குழந்தைகளின் ஆர்வங்களை கண்காணித்து அதற்கு ஏற்ப அவர்களை ஊக்குவிக்கவேண்டும்.
விருப்பங்கள்
எந்தவொரு சூழலிலும் தடுமாற்றமோ, பீதியோ அடையாமல் தைரியமாக முடிவெடுக்கும் திறனை வளர்த்துக்கொள்ள குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள். அவர்களின் விருப்பங்களை வரைமுறைப்படுத்தி அதனை நிறைவேற்றுவதற்கு பக்கபலமாக இருங்கள்.
விருப்பங்களை நிறைவேற்றும்போது எதிர்கொள்ளும் இடையூறுகள், தடைகளை தைரியமாக கையாளுவதற்கும் வழிகாட்டுங்கள். தோல்வியை எதிர்கொண்டால் அதனை அனுபவ பாடமாக எடுத்துக்கொண்டு அதில் இருந்து மீள்வதற்கான மன வலிமை கொண்டவர்களாக உருமாற்றுங்கள்.
வெற்றிகளை புகழ்ந்து பேசுங்கள்
உங்கள் குழந்தைகள் பெற்ற வெற்றி சிறியதோ, பெரியதோ மனந்திறந்து பாராட்டுங்கள். அந்த வெற்றியை பற்றி தொடர்ந்து பேசுங்கள். படிப்பிலோ, தனித்திறனிலோ முதலிடம் வந்தால்தான் பாராட்ட வேண்டும் என்றில்லை.
முதல் ஐந்து இடங்களுக்குள் வந்தாலும் மனமார புகழுங்கள். ஏதேனும் பரிசு பொருட்கள் வாங்கிக்கொடுத்து ஊக்கப்படுத்துங்கள். அடுத்தமுறை இதை விட சிறப்பாக செயல்பட வேண்டும் என்று ஊக்குவிக்க வேண்டுமே தவிர, 'இப்போது ஏன் உன்னால் முடியவில்லை' என்று அவர்களின் மனம் நோகும்படி பேசக்கூடாது. அவர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட செயல் திட்டங்களை உருவாக்கி கொடுத்து அதனை பின்பற்ற வழிகாட்டுங்கள்.
வேலையை முடித்ததும் பாராட்டுங்கள்
குழந்தைகளுக்கு ஏதேனும் ஒரு வேலையை கொடுத்திருந்தால், அதனை செய்து முடித்ததும் பாராட்டுவதற்கு மறக்காதீர்கள். அது சின்ன வேலையாகக்கூட இருக்கலாம். இதையெல்லாம் பாராட்ட வேண்டுமா? என்ற எண்ணம் கூட தோன்றலாம்.
ஆனால் குழந்தைகளை பொறுத்தவரை, சின்ன சின்ன பாராட்டுகளை கொண்டாடுவார்கள். அந்த வேலையை செய்து முடிக்க தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் மதிப்புமிக்கவை என்பதை உணர்ந்து கொள்வார்கள். இன்னும் சிறப்பாக செயல்பட ஆர்வம் காட்டுவார்கள்.
விளையாட்டு மூலமே ஊக்கப்படுத்துங்கள்
பொதுவாக குழந்தைகள் விளையாட்டு மனப்பான்மையில் இருப்பார்கள். அவர்கள் விரும்பிய விளையாட்டுகளை விளையாட ஊக்கப்படுத்துங்கள். அந்த விளையாட்டுடனேயே அன்றாட நடவடிக்கைகளை இணைத்துவிடுங்கள். அதன் மூலம் விளையாட்டு மனோபாவத்திலேயே அன்றாட வேலைகளையும் செய்து முடித்துவிடுவார்கள்.
அதுபோல் புதிதாக ஏதேனும் விஷயங்களை கற்றுக்கொடுக்க விரும்பினால் விளையாட்டுடன் அதனை இணைத்துவிடுங்கள். அது இரட்டிப்பு பலனை அவர்களுக்கு கொடுக்கும்.
சவால் விடுங்கள்
சவால்களை சமாளிக்கும் திறன்களை வளர்த்துக்கொள்ள குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள். குழந்தைகளுடன் போட்டிப்போட்டு செயலில் இறங்குங்கள். யார் எடுத்த காரியத்தை முதலில் முடிப்பது என்று பார்க்கலாம் என்று சவால் விடுங்கள்.
ஏனெனில் சவால் விடாவிட்டால் அவர்களின் ஆர்வம் படிப்படியாக குறையலாம். அல்லது சலிப்படையலாம். அதற்கு இடம் கொடுக்காமல் அவர்களின் விருப்பங்களை கண்டறிந்து சவால்விட்டு அதில் அதிக ஈடுபாடு காண்பிக்க ஊக்குவியுங்கள்.
ஆர்வத்தை ஆராயுங்கள்
குழந்தைகளின் ஆர்வத்தை கண்டறிந்து ஊக்குவிப்பது பெற்றோருக்கு கடினமான செயலாக இருக்கலாம். அவர்களுடன் தினமும் குறிப்பிட்ட நேரத்தை செலவிடும் வழக்கத்தை பின்பற்றினாலே போதும்.
எந்தெந்த விஷயங்களில் கூடுதல் ஈடுபாடு காட்டுகிறார்கள். எதன் மீது அதிக பிரியம் கொண்டிருக்கிறார்கள்? அதிக நேரம் செலவிடும் விஷயம் எது? என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்த்தும், அவர்களின் விருப்பங்களை கேட்டறிந்தும் ஊக்குவிக்கலாம்.
ஓவியம் வரைய ஆர்வம் காட்டினால் அது தொடர்பான பொருட்களை வாங்கி கொடுக்கலாம். தகுந்த ஆலோசனைகளையும் கூறி ஊக்குவிக்கலாம். அவர்கள் இன்னும் ஆர்வமாக அதில் கவனம் செலுத்த அது வழிகாட்டும்.
சரிவிகித உணவுக்கு முக்கியத்துவம்
உங்கள் குழந்தைகள் சத்தான, ஊட்டச்சத்துமிக்க சரிவிகித உணவுகளை சாப்பிடுகிறார்களா? என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது ஒட்டுமொத்த உடலின் ஆற்றல் அளவை மேம்படுத்தும்.
எந்தெந்த உணவுகளில் எத்தகைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்பதை எடுத்துரைத்து அவர்களை உண்ண ஊக்குவிக்கலாம். சாலட் உள்ளிட்ட அடுப்பில் சமைக்கப்படாத உணவு பதார்த்தங்களை அவர்கள் கைப்படவே தயாரித்து சாப்பிட ஊக்குவிக்கலாம்.
தனித்துவத்தை அடையாளம் காணுங்கள்
குழந்தைகளின் சில செயல்பாடுகள் தனித்துவமிக்கதாக இருக்கும். மற்றவர்களிடம் இருந்து தனித்துவமானவர்களாக அடையாளம் காண்பிக்கவும் செய்யும். உதாரணமாக கணித பாடத்தில் சிறந்து விளங்கினால் சக மாணவர்களுக்கு விளக்கமாக சொல்லிக்கொடுக்க ஊக்கப்படுத்தலாம்.
அந்த செயல்பாடு அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். இன்னும் ஆர்வமாக கணிதம் கற்றுக்கொள்ளவும், பிறருக்கு எளிமையாக புரிய வைக்கவும் ஊக்கப்படுத்தும்.