இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 2.9 சதவீதமாக உள்ளது.
புதுடெல்லி: உலகளாவிய பட்டினி குறியீட்டில் 105வது இடத்தில் இந்தியா உள்ளதாக சர்வதேச ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 127 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்ட 19வது உலக பட்டினி குறியீடு-2024ல் இந்தியா 105வது இடத்தில் உள்ளது. அயர்லாந்தின் கன்சர்ன் வேர்ல்டுவைட் மற்றும் ஜெர்மனியின் வெல்த் ஹங்கர் லைஃப் ஆகியவை இணைந்து இந்த குறியீட்டை வெளியிட்டன.
அதிக மதிப்பெண் மற்றும் ரேங்க் பெற்ற நாடுகள் கடுமையான பட்டினி நெருக்கடியில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நமது அண்டை நாடுகளான இலங்கை, உள்நாட்டு நெருக்கடிகளை சந்தித்து வரும் வங்கதேசம், மியான்மர், நேபாளம் ஆகிய நாடுகள் இந்த குறியீட்டில் இந்தியாவை விட சிறந்த நிலையில் உள்ளன. இந்த குறியீட்டில் இந்தியா 29.3 மதிப்பெண்களுடன் ‘கவலைக்குரிய’ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
உலகில் 36 நாடுகள் மட்டுமே ‘கவலை’ பிரிவில் உள்ள நிலையில், அதில் இந்தியாவும் ஒன்று. 2000ம் ஆண்டில் இந்தியாவின் மதிப்பெண் 38.4, 2008ல் 35.2, 2016ல் 29.3 என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக பட்டினி குறியீட்டில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டாலும், இந்தியாவில் இன்னும் பட்டினி குறையவில்லை என்பது இந்தக் குறியீட்டிலிருந்து தெளிவாகிறது. மேலும் அந்த அறிக்கையில், இந்தியாவில் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு கடுமையாக இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் குழந்தை வளர்ச்சி குன்றிய விகிதம் 35.5 சதவீதமாக உள்ளது; அதே சமயம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 2.9 சதவீதமாக உள்ளது. நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு 13.7 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் 2000ம் ஆண்டிலிருந்து குழந்தை இறப்பு விகிதம் குறைந்திருந்தாலும், குழந்தைகளின் வளர்ச்சி குன்றிய நிலையிலேயே இருப்பதாக மேற்கண்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகம்; உலகளாவிய பட்டினி குறியீட்டில் 105வது இடத்தில் இந்தியா: சர்வதேச ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.