சென்னை: யூடியூபரான இர்பான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் யூடியூபர் இர்பானுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அவரது யூடியூப் சேனலில் நேற்று முன்தினம் ஒரு வீடியோ வெளியானது. அதில் பிரசவத்திற்கு முன்னால் கருவுற்ற தனது மனைவியுடன் இர்பான் பேசுவது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, அறுவை சிகிச்சைக்கு தயாராவது, பிரசவம் நடைபெற்றது என பல்வேறு காட்சிகள் இருந்தன. குறிப்பாக, அந்த வீடியோவில் குழந்தை பிறந்த போது பிரசவ அறையில் தொப்புள் கொடியை வெட்டும் காட்சியும் இடம்பெற்று இருந்தது.
இது தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி தவறு என மருத்துவர்களும் பொதுமக்களும் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து இர்பானிடம் விளக்கம் கேட்கப்பட்டு அதற்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த வீடியோ வெளியிட்டது தொடர்பாக முதலில் அந்த மருத்துவமனையுடன் விளக்கம் கேட்கப்படும். இது தவறு என விசாரணையில் தெரியவந்தால் அந்த மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அந்த பிரசவம் மேற்கொண்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரை செய்வோம்.
அதனை தொடர்ந்து இர்பானிடம் விளக்கம் கேட்கப்பட்டு அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். விளம்பர நோக்கில் அவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். எனவே இது கண்டிக்கத்தக்கது நடவடிக்கை எடுக்கப்படக்கூடியதுதான். இது ஒரு தவறான முன்னுதாரணம். இனி வரும் காலத்தில் இதுபோன்று யாரும் செய்ய கூடாது. இர்பானிடம் விளக்கம் கேட்கப்பட்டு அதற்கு பிறகு காவல்துறையிடம் புகார் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட வீடியோ சர்ச்சையான நிலையில், யூடியூபர் இர்பான் மீண்டும் ஒரு சிக்கலில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், குழந்தையின் ெதாப்புள் கொடியை வெட்டிய விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளானதால் தான் வெளியிட்ட வீடியோவை யூடியூப்பில் இருந்து இர்பான் நீக்கம் செய்துள்ளார்.
The post குழந்தை தொப்புள்கொடியை வெட்டிய விவகாரம்; யூடியூபர் இர்பான் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சுகாதாரத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.