வேலூர், அக்.2: காட்பாடி தாலுகாவில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூலை வரை நடந்த குழந்தை திருமணத்தால் 4 சிறுமிகள் கர்ப்பமான நிலையில் 4 வாலிபர்கள் மீது காட்பாடி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த 17 வயது சிறுமியும், காட்பாடி தாலுகாவின் ஒரு கிராமத்தை சேர்ந்த 18 சிறுவனும் கடந்த ஏப்ரல் 14ம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளனர். தற்போது அச்சிறுமி 3 மாத கர்ப்பமாக உள்ளார். அதேபோல் காட்பாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், காட்பாடி தாலுகாவில் ஒரு கிராமத்தை சேர்ந்த 24 வயது வாலிபருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த சிறுமி 2 மாத கர்ப்பமாக உள்ளார்.
அதேபோல் காட்பாடியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், காட்பாடி அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 25 வயது வாலிபருக்கும் கடந்த மே மாதம் 25ம் தேதி திருமணம் நடந்து, அச்சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளார். மேலும், கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி காட்பாடியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த 21 வயது வாலிபருக்கும் திருமணம் நடந்து அச்சிறுமியும் 4 மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் மேற்கண்ட 4 சிறுமிகளும் கர்ப்பகால பரிசோதனைக்காக கிராம துணை சுகாதார நிலையத்துக்கு வந்தபோது இவர்கள் 4 பேரும் மேஜராகாத சிறுமிகள் என்பது தெரிய வந்தது. இவர்கள் காதலித்து திருமணம் செய்தவர்கள் மற்றும் தங்கள் சம்மதத்துடன் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக கிராம நல அலுவலர் சித்ரா கொடுத்த புகாரின் பேரில் காட்பாடி மகளிர் போலீசார் குழந்தை திருமணம் செய்து சிறுமிகளை கர்ப்பமாக்கிய 4 வாலிபர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேருக்கும் 41ஏ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
The post குழந்தை திருமணம் செய்து 4 சிறுமிகள் கர்ப்பம் 4 பேர் மீது போக்சோ வழக்கு காட்பாடி தாலுகாவில் appeared first on Dinakaran.