புதுடெல்லி,
இந்தியாவில், பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும், ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு குறைவான வயதில் திருமணம் செய்தால், அது குழந்தை திருமணமாக கருதப்பட்டு, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
குழந்தை திருமண தடுப்பு சட்டம் இருந்தபோதிலும், குழந்தை திருமணங்கள் நடப்பதால், அவற்றை தடுக்க சட்டத்தை உறுதியாக அமல்படுத்தக்கோரி ஒரு தன்னார்வ அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று இவ்வழக்கில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்தது. குழந்தை திருமணங்களை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
இதுதொடர்பாக நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், "குழந்தைகள் திருமண தடுப்பு சட்டம், குழந்தை திருமணங்களை தடுக்கிறது. இருப்பினும், அது குழந்தை திருமணத்தின் சமூக அவலங்களை குறிப்பிடவில்லை. குழந்தை திருமணங்கள், தங்கள் வாழ்க்கைத்துணையை தேர்வு செய்வதற்கான விருப்பத்தை குழந்தைகளிடம் இருந்து பறிக்கின்றன. முதிர்ச்சியடைவதற்கு முன்பு, தங்கள் வாழ்க்கைப்பாதையை தேர்ந்தெடுக்கும் உரிமையை பறிக்கின்றன.
குழந்தை திருமண தடுப்பு சட்டம் என்பது ஒரு சமூக சட்டம். எனவே, அனைத்து தரப்பினரின் கூட்டு முயற்சிகள் மூலம்தான் அச்சட்டம் வெற்றி பெறும். குழந்தை திருமணங்கள் குறித்து புகார் அளிப்பது, மக்கள் விழிப்புணர்வு பிரசாரங்கள் ஆகியவை அதிகரிக்க வேண்டும். தண்டனை அளிப்பதை விட குழந்தை திருமணங்களை தடுப்பதுதான் இந்த வழிகாட்டு நெறிமுறைகளின் நோக்கம். குழந்தை திருமணம் செய்தவருக்கு தண்டனை அளிப்பதால், சம்பந்தப்பட்ட குடும்பங்கள் மற்றும் சமுதாயங்கள் மீது ஏற்படும் தாக்கத்தை நாங்கள் அறிவோம்.
குழந்தை திருமணங்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு, கல்வி கற்பிக்கப்பட வேண்டும். சட்டரீதியான பின்விளைவுகள் பற்றி அறிவுறுத்தப்பட வேண்டும். சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகள், வழக்கு தொடர்வதில் கவனம் செலுத்தாமல், குழந்தை திருமணங்களை தடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும். அதே சமயத்தில், குழந்தை திருமணம் செய்தவர்கள் மீது வழக்கு தொடரக்கூடாது என்று நாங்கள் சொல்வதாக தவறாக புரிந்து கொள்ளக்கூடாது" என்று அதில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.