குல தெய்வ சக்தியை வீட்டிற்கு வரவழைப்பது எப்படி?

3 weeks ago 3

குலதெய்வ வழிபாடு அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். குல தெய்வத்தின் அருள் இருந்தால்தான் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தடையின்றி நடைபெறும், குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் பெருகும். எனவே, குல தெய்வத்தின் சக்தி வீட்டில் நிலைத்திருப்பது அவசியம். சொந்த ஊரில் இப்பவர்களும் சரி, வேலை நிமித்தமாக வெளியூர்களுக்கு சென்று குல தெய்வத்தை அடிக்கடி தரிசிக்க முடியாதவர்களும் சரி, அவரவர் வசிக்கும் வீட்டிற்குள் குல தெய்வ சக்தியை அழைத்து குடியேற்றலாம். இதற்கான எளிய வழிமுறைகளை பார்ப்போம்.

மஞ்சள், மண், சந்தனம், குங்குமம், விபூதி, சாம்பிராணி, அடுப்புக்கரி போன்றவற்றை சிறிதளவு எடுத்து, அதை ஒரு சிவப்பு துணியில் வைத்து முடிச்சுப் போட்டு, வீட்டின் வாசல்படி உட்புறம் நிலைப்படியின் மையத்தில் மேல் பகுதியில் ஆணி அடித்து மாட்டி வைக்க வேண்டும். பின்னர் தினமும் அதற்கு தூப, தீபம் காட்டி வழிபட்டு வந்தால், குலதெய்வ சக்தியை வீட்டில் வரவழைக்கலாம் என்பது ஆன்மிக சான்றோர்களின் கருத்து.

ஒரு கலச சொம்பில், சிறிதளவு வெட்டிவேர், பச்சை கற்பூரம், ஏலக்காய் போட வேண்டும். பன்னீர் ஊற்ற வேண்டும். பன்னீர் அளவிற்கு தண்ணீரும் ஊற்ற வேண்டும். பின்னர் அந்த கலசம் முழுவதும் நூலைச் சுற்ற வேண்டும். நூல் சுற்றத் தெரியாதவர்கள், பட்டுத் துணியை சுற்றலாம். பின்னர் வீட்டின் பூஜை அறையில் ஒரு பலகை வைத்து, அதன் மீது வாழை இலை போட்டு, அதில் பச்சரிசி பரப்பி, அதன் மீது கலச சொம்பை வைக்க வேண்டும். கலசத்தின் மீது வாழைப்பூவை, நுனிப் பகுதி மேல்நோக்கி இருக்கும்படி வைக்க வேண்டும். வாழைப்பூவுக்கும், கலசத்திற்கும் இடையில் மாவிலை அல்லது வெற்றிலை சுற்றி வைக்க வேண்டும்.

பின்னர் கலசத்திற்கு வில்வ இலை அல்லது ஊமத்தம் பூ கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். கலசத்தின் மீது வைத்திருக்கும் வாழைப்பூ, மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும். பூஜை செய்வதற்கு அந்த மூன்று நாட்களே போதுமானது.

தொடர்ந்து பூஜை செய்ய விரும்புவர்கள், வாழைப்பூவை மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். பூஜை முடிந்ததும் பச்சரிசியை சமையல் செய்தும், வாழைப்பூவை வடை செய்தும், அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.

கலசத்தில் உள்ளவற்றை வீட்டைச் சுற்றி தெளித்தும், குளிக்கும் நீாில் விட்டு நீராடவும் செய்ய வேண்டும். அதோடு 'ஓம் பவாய நம, ஓம் சர்வாய நம, ஓம் ருத்ராய நம, ஓம் பசுபதே நம, ஓம் உக்ராய நம, ஓம் மஹாதேவாய நம, ஓம் பீமாய நம, ஓம் ஈசாய நம' என்ற மந்திரத்தை தினமும் 108 முறை காலை மற்றும் மாலை வேளைகளில் பாராயணம் செய்து வழிபட்டு வந்தால் குலதெய்வத்தின் அருளைப் பெறலாம்.

Read Entire Article