சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் கோட்டூர், மண்டபம் சாலை பகுதியைச் சேர்ந்த பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் (37) கைது செய்யப்பட்டுள்ளார். ஜாமீனில் வெளியே வர முடியாதபடி அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.அவரது குற்ற பின்னணி குறித்து பல்வேறு புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:கைதான ஞானசேகரனின் தந்தைக்கு பூர்வீகம் மதுராந்தகம். அவர் அங்கிருந்து பல ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை கோட்டூருக்கு இடம் பெயர்ந்துள்ளார். அங்குதான் ஞானசேகரன் பிறந்துள்ளார். தட்டுத் தடுமாறி டிப்ளமோ இன்ஜினியரிங் வரை படித்துள்ளார். சிறுவயதிலேயே போதைப் பழக்கத்துக்கு அடிமையான ஞானசேகரன், பெண்களிடமும் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். பெற்றோர் கண்டித்த நிலையில், அவர் கூலி வேலைக்கு சென்றுள்ளார்.