குற்றப்பத்திரிகை தாக்கலில் தாமதம் விவகாரம்; உள்துறை செயலாளர் ஆஜராகவில்லை என்றால் வாரண்ட்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

2 hours ago 1


சென்னை: தமிழக அரசின் உள்துறை செயலாளர் இன்று மாலைக்குள் நேரில் ஆஜராகவில்லை என்றால் அவருக்கெதிராக வாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை மிரட்டல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 2015ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கு, அப்போதே முடித்து வைக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை்கேட்ட நீதிபதி, காவல் துறையினர் பதிவு செய்யும் வழக்குகளில் புலன் விசாரணை முடிந்த பின், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது இது முதல் வழக்கல்ல.

தமிழகம் முழுவதும் பல வழக்குகளில் காவல்துறையினர் குறித்த காலத்திற்குள் குற்ற பத்திரிகையை தாக்கல் செய்வதில்லை. இதனால் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சம்பந்தப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படுகிறது. நீதிமன்றத்தை நாட இயலாத ஏழை மக்கள், நீதியைப் பெற போராட வேண்டியுள்ளது. நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்தாலும் அதனை காவல்துறையினர் பின்பற்றுவதில்லை. மேலும், வழக்குப்பதிவு செய்யக் கோரியும், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரியும் ஏராளமான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது, காவல் துறையினர் உரிய விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்பதையே காட்டுகிறது. காவல்துறையின் இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து உள்துறை செயலாளருக்கு தெரியுமா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, இன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணை வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ. ரவீந்திரன் ஆஜராகி, உள்துறை செயலாளர் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி மனுத்தாக்கல் செய்திருப்பதாகவும் அந்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் உச்ச நீதிமன்றத்தில் உள்துறை செயலர் நேரில் ஆஜராக தடை விதிக்க கோரி மனுத்தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவித்தார். அப்போது நீதிபதி, விலக்களிக்க உத்தரவிட முடியாது. உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றால் தெரிவியுங்கள். இன்று மாலை 4.30 மணிக்கு உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் இல்லாவிட்டால் வாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என தெரிவித்து விசாரணையை தள்ளி வைத்தார்.

The post குற்றப்பத்திரிகை தாக்கலில் தாமதம் விவகாரம்; உள்துறை செயலாளர் ஆஜராகவில்லை என்றால் வாரண்ட்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article