குற்றச்சாட்டு தொடர்பாக தனுஷ் பதிலளிப்பார் - நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பிய வழக்கறிஞர் விளக்கம்

2 hours ago 2

சென்னை,

'லேடி சூப்பர் ஸ்டார்' என கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான "நானும் ரவுடி தான்" திரைப்படத்தின் மூலம் தான் நயன்தாராவிற்கும், அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அது காதலாக மாற, கடந்த 2022ம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த சூழலில் நடிகை நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து ஒரு ஆவணப்படம் தயாராகி உள்ளது.

'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படம் வருகிற 18-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த ஆவணப்படத்தில், நடிகர் தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா நடித்த படத்தின் காட்சிகள் இடம்பெற அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தனுஷ் மீது குற்றம்சாட்டி நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "பல தவறான விசயங்களை சரி செய்வதற்காகவே வெளிப்படையான இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதியிருக்கிறேன். உங்கள் தந்தை கஸ்தூரி ராஜா அவர்கள் உறுதுணையோடு, சிறந்த இயக்குநரான உங்கள் அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் திரைத்துறைக்கு எந்து பிரபல நடிகராக மாறியிருக்கும் நீங்கள் நிச்சயம் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.

சினிமா பின்புலம் எதுவும் இல்லாமல் தனி ஒரு ப்ண்ணாக, சவால்கள் நிறைந்த திரைத்துறைக்கு வந்து கடின உழைப்பாலும் நேர்மையான அர்ப்பணிப்பாலும் இன்றைய நிலையை அடைந்திருக்கிறேன். நேர்மறையான எனது பயணத்தை என் மீது அன்பு செலுத்தும் எனது ரசிகர்களும், திரைத்துறையினரும் நன்றாகவே அறிவார்கள். நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கும் 'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' ஆவணப்படத்தை என்னைப் போலவே ஏராளமான எனது ரசிகர்களும் நலம் விரும்பிகளும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ரசிகர்களின் அந்த ஆர்வத்தை பூர்த்தி செய்யவே இதில் பணியாற்றியிருக்கும் ஒவ்வொருவரும் பல்வேறு தடைகளையும் மீறி, அனைத்துப் பணிகளையும் முடித்து தற்போது வெளியீட்டுக்கு தயார் செய்திருக்கிறோம்.

உங்களது தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும் எனது கணவரும் மட்டுமின்றி ஆவணப்பட பணிகளில் அர்ப்பணிப்போடு பங்காற்றிய ஒவ்வொருவரும் வெகுவாக பாதிப்படைந்திருக்கிறோம். காதல், திருமணம் உள்ளிட்ட எனது வாழ்வின் மகிழ்கான தருணங்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படத்தில் என் வாழ்வின் மகத்துவமான காதலை கண்டடைந்த 'நானும் ரவுடிதான்' திரைப்படம் இல்லாததன் வலி மிகவும் கொடுமையான.

நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் 'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடிதான்' படத்தின் காட்சிகளையும் பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில் உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெறுவதற்காக 2 வருடங்களாக காத்திருந்தோம். எங்கள் எவ்லாப் போராட்டங்களும் பலனளிக்காத நிலையில் அந்த முடிவையே கைவிட்டு ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம்.

நானும் ரவுடிதான் திரைப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுவதற்கு முக்கியமான காரணம் இதயத்திலிருந்து எழுதப்பட்ட அதன் வரிகள். ஆனால், அந்த வரிகளைக் கூட ஆவணப்படத்தில் பயன்படுத்தக் கூடாது என்பது எந்த அளவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என்பது உங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் புரியும். தடையில்லா சான்றிதழ் (NOC) மறுக்கப்பட்டது வியாபார ரீதியானதாகவோ அல்லது சட்ட ரீதியானதாகவோ இருந்தால் நிச்சயமாக அதனை ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், முழுக்க முழுக்க என் மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமேயான உங்களது இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

சமீபத்தில் வெளியான டிரைலரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவிற்கு எதிராக லீகல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிலும், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு ரூ. 10,00,00,000 (பத்து கோடி) நஷ்ட ஈடு கேட்கப்பட்டு இருப்பது மிகவும் விநோதமாக இருக்கிறது. கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவதைப் போல் ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது என்பதை நானும், எனது கணவரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம்.

எனது திரைப்பயணத்தின் இனிமையான நினைவுகளைக் கொண்ட பல்வேறு காட்சிகள் ஆவணப்படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அதற்கான அனுமதிக்காக வேறு தயாரிப்பாளர்களை அணுகியபோது பேரன்போடு அனுமதித்தார்கள். அப்போதுதான உங்களில் இருந்து எவ்வளவு மாறுபட்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. அதனால்தான் காலங்களைக் கடந்தும் கொண்டாடப்படுபவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். சட்டப்பூர்வமான உங்களது நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள நாங்களும் தயராகவே இருக்கிறோம். 'நானும் ரௌடிதான்' படம் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கும், பாடல்களுக்கும் தடையில்லா சான்றிதழ் வழங்காததற்கான காபி ரைட் (Copy right) காரணங்களை நீங்கள் நீதிமன்றத்தில் விளக்கிக் கொள்ளுங்கள். ஆனால், கடவுள் மன்றத்தில் நீங்கள் தெளிவுப்படுத்த வேண்டிய சில விசயங்கள் இருக்கின்றன" என்று நயன்தாரா அதில் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. நயன்தாராவுக்கு நடிகைகள் பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நயன்தாராவின் குற்றச்சாட்டு எதுவாக இருந்தாலும் தனுஷ் பதிலளிப்பார் என்று வழக்கறிஞர் அருண் தெரிவித்துள்ளார். முன்னதாக ரூ.10 கோடி நஷ்ட ஈடுகேட்டு தனுஷ் சார்பில் நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தநிலையில் வழக்கறிஞர் அருண் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.  

Read Entire Article