சென்னை,
16-வது நிதிக்கமிஷன் தலைவர் அர்விந்த் பனகாரியா தலைமையிலான குழுவினர், 4 நாட்கள் பயணமாக நாளை தமிழகத்திற்கு வருகை தர உள்ளனர். இதன்படி நிதிக் கமிஷன் உறுப்பினர்கள் 12 பேர் சிறப்பு விமானத்தில் நாளை பிற்பகல் தமிழகத்திற்கு வருகின்றனர். சென்னையை அடுத்த நங்கநல்லுார் செல்லும் அவர்கள், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரங்கராஜனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
பின்னர் இரவு 7.30 மணிக்கு ஐ.டி.சி. கிராண்ட் சோழா திரும்பும் குழுவினர், அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ள பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கண்டு களிப்பதுடன், முதல்-அமைச்சர் ஏற்பாடு செய்துள்ள இரவு விருந்தில் கலந்து கொள்கின்றனர். பின்னர்18-ந்தேதி முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
அப்போது, வரி பகிர்வின் அடிப்படையில் தமிழகத்துக்கு உரிய நிதியை வழங்க பரிந்துரைக்க வேண்டும் என்று நிதிக்குழுவிடம் முதல்-அமைச்சர் வலியுறுத்த உள்ளதாக தெரிகிறது. இதையடுத்து 19-ந்தேதி கடல்நீரை குடிநீராக்கும் நெமிலி பிளாண்ட்டை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். அங்கிருந்து ஸ்ரீபெரும்புதுார் சென்று ஏற்றுமதி தொடர்புடைய யூனிட்களை பார்வையிடுகின்றனர்.
தொடர்ந்து 20-ந்தேதி தனுஷ்கோடி செல்லும் குழுவினர், ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தை பார்வையிடுகின்றனர். அதனை தொடர்ந்து கீழடி அகழ்வாராய்ச்சி மையத்தை நிதி கமிஷன் குழுவினர் நேரில் பார்வையிட உள்ளனர்.