ராமநாதபுரம், நவ.19: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். கலெக்டரிடம் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் மற்றும் கிராமத்தினர், சங்கங்களின் நிர்வாகிகள் 326 மனுக்கள் அளித்தனர். மனுக்களை விசாரணை செய்து, உரிய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி நடவடிக்கையினை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அப்போது கலெக்டர் கூறும்போது, ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு மாதத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் எனவும், தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்களிடம் அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து முதுகுளத்தூர் பகுதியில் பாம்பு கடித்து இறந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலை, ராமநாதபுரம் வட்டத்தைச் சேர்ந்த, கடலில் தவறி விழுந்து இறந்த ஒருவரின் குடும்பத்தாருக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை தாசில்தார் தனலெட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் செல்வி, கூடுதல் நேர்முக உதவியாளர் தமிழரசி கலந்து கொண்டனர்.
The post குறைதீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் appeared first on Dinakaran.