குறை தீர்க்கும் பெருமாள்கள்

3 months ago 22

பெருமாள் கோயில்களில், 108 முக்கிய கோயில்களை, 108 திவ்ய தேசங்கள் என்கிறோம். இந்த 108 திவ்ய தேசங்களில் பெருமாள் இருக்கும் திசைகளில் 39 கோயில்களில் பெருமாள் கிழக்கு நோக்கியும், 12 இடங்களில் மேற்கு நோக்கியும், 14 இடங்களில் தெற்கு நோக்கியும், 2 இடங்களில் மேற்கு நோக்கியும் நின்ற படியும் அருள்பாலிக்கிறார். 17 கோயில்களில், அமர்ந்த கோலத்தில் உள்ளார். இதில் கிழக்கு நோக்கி 13 கோயில்களிலும், மேற்கு நோக்கி 3 கோயில்களிலும், வடக்கு நோக்கி ஒரு கோயிலிலும் அமர்ந்து இருக்கிறார்.

24 கோயில்களில், சயனக்கோலத்திலும் இருக்கிறார். இதில் 18 இடங்களில் கிழக்குநோக்கியும், 3 இடங்களில் தெற்கு நோக்கியும், 3 இடங்களில் மேற்குநோக்கியும் படுத்திருக்கிறார். பெருமாள், இந்த 108 கோயில்களில் தெற்கு நோக்கி அமர்ந்து இருக்கவில்லை. மேற்கு நோக்கி படுத்திருக்கவில்லை. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி, கும்பகோணம் நாச்சியார் கோயில் நம்பி ஆகியோர் இரண்டு கைகளுடன் அருள்பாலிக்கிறார். இத்தலங்களில் எல்லாம் சுவாமி மனித வடிவில் வந்து அருள்புரிவதாக ஐதீகம்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகாவில், பெரிய அய்யம்பாளையம் என்னும் ஊரில், ஒரு சிறு குன்றின் மேல் அமைந்திருக்கிறது உத்தமராயப் பெருமாள் கோயில். இத்தலம் வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில், கண்ணமங்கலத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ளது. இத்தல பெருமாள், ஊமைச் சிறுவனுக்கு காட்சி கொடுத்து பேசவைத்தவர் என்பதால், மூலவர் உத்தமராயப் பெருமாள், சிறுவன் போலவே பால்ய மூர்த்தியாக காட்சியளிப்பது தனிச் சிறப்பாகும். இங்கு சனிக் கிழமை தோறும் பேச்சாற்றல் குறைவுடையோரின் பெற்றோர்கள் வந்து வழிபடுகின்றனர்.

பொதுவாக சக்கரத்தாழ்வாருக்கு கோயிலில் வாகனம் எதுவும் இருப்பதில்லை. ஆனால் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் நீலமணி நாதசுவாமி கோயிலில், சுதர்சனரை சிம்ம வாகனத்தின் மீது அமர்ந்த நிலையில் காணலாம். புத்திரதோஷம் உள்ளவர்கள் இங்கு பெருமாளுக்கு கறிவேப்பிலை சாதம் நிவேதனம் செய்யும்போது, அது நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

திருச்சிக்குச் சற்று அருகாமையில் இருக்கின்ற குணசீலம் என்கிற ஊரில், அருள்மிகு ஸ்ரீபிரசன்ன வேங்கடாஜலபதி சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலின்
மூலவரின் பெயர் ஸ்ரீபிரசன்ன வேங்கடாஜலபதி, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோயிலில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தம் காலை, மாலை இருவேளையிலும் மருந்தாக தரப்படும். சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் முதலில் வழங்கப்படுவது, அங்கு தங்கியிருக்கும் மனநோயாளிகளுக்குதான். காலையில் முதல் தரிசனம் மன நோயாளிகளுக்குதான்.

கோவைக்கு வடகிழக்கே 42 கி.மீ. தொலைவில் உள்ள ஆலத்தூர் என்ற ஊரில், வெங்கடேச பெருமாள் கோயில் இருக்கிறது. இங்கு, கோயிலுக்கு மேற்கு புறத்தில் உள்ள குளத்தில் நீராடும் பக்தர்கள், நீராடி முடிந்ததும் துளசி, வேப்பிலை, எலுமிச்சைச் சாறு, மருக்கொழுந்து போன்ற பொருட்களை ஒன்று சேர்த்து, தீ மூட்டுகிறார்கள். அதில் இருந்து வரும் புகையை சுவாசிக்கிறார்கள். இதனால், தோல் நோய்கள் இருப்பவர்களுக்கு அந்த நோய்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், தீ எரிந்து முடிந்த பின்னர் கிடைக்கும் கரித்தூளை உடலில் சொறி, சிரங்கு உள்ளவர்கள் அந்த பகுதியில் பூசுகிறார்கள். அதனால் அதிலிருந்து அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது.

வேலூர் மாவட்டம் காவேரிப் பாக்கத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் திருப்பாற்கடல் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் பிரசித்திப் பெற்றது. சிவலிங்கத்தின் ஆவுடையாருக்கு மேலே பிரசன்ன பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தரும் அற்புத தலம் இது. இதுபோன்ற காட்சியை வேறு எங்கும் காண முடியாது. ஹரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் உள்ள இந்த கோயிலை தரிசித்தால், திருப்பாற்கடலை தரிசித்த பலன் கிடைப்பதாகவும், பாவங்கள் அனைத்தும் விலகுவதாகவும் தலபுராணம் கூறுகிறது. காது கேளாதோர், நினைவாற்றல் குறைவாக உள்ளவர் இங்கு வந்து வழிபட நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சீர்காழியில் உள்ள திரிவிக்கிரமன் பெருமாள் கோயிலில், ஒரு வித்தியாசமான வழிபாடு நடக்கிறது. வீடு கட்டும் முன்பு பக்தர்கள் மணல் வைத்து பூஜை செய்கின்றனர். இவரிடம் நிலம் தொடர்பான பிரச்னைகள் தீர வேண்டிக் கொண்டால், அவை நிவர்த்தியாகும். வாஸ்து தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. செங்கல்பட்டு சிங்கப் பெருமாள் கோயிலிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் ஆப்பூர் அமைந்துள்ளது. இந்த ஊரில் ஔஷதகிரி (மூலிகை மலை) என்ற மலை மீது நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வெங்கடேசப் பெருமாள் மட்டுமே பிரதான தெய்வம். வேறு சந்நதிகள் கிடையாது. இத்தலத்தில், பெருமாளும் தாயாரும் இணைந்து ஒரே வடிவில் இருப்பதால் எப்போதும் கல்யாண கோலத்தில் இருப்பதாக நம்பிக்கை.

அதனால்தான் பெருமாளுக்கு ‘நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்’ என்ற பெயர் ஏற்பட்டது. பெருமாள் லட்சுமி சொருபமாக இருப்பதனால், புடவைதான் வஸ்திரமாக சாற்றப்படுகிறது. அதைத் தவிர வேறு வஸ்திரங்கள் பெருமாளுக்கு சாற்றபடுவதில்லை. திருமணம் நிறைவேறாமல் இருப்பது, வேலையின்மை, கடன்சுமை போன்றவற்றால் அவதிப்படுபவர்கள், இந்த ஆலயத்துக்கு வந்து, பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, புடவை அணிவித்து, ஐந்து முறை பிரதட்சணம் செய்து வழிபட்டால், குறைகள் போய்விடும்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் 43-ம் திருப்பதியாகும். புதுக்கோட்டையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பெருமாள் கோயில்கள் பலவற்றில் மூலவர் நின்ற கோலத்திலோ அல்லது சயன கோலத்திலோ காணப்படுவது உண்டு. ஆனால் இந்த ஆலயத்தில் நின்ற கோலத்திலும், அனந்த சயனத்திலும் பெருமாள் எழுந்தருளி காட்சி அளிப்பது தனிச் சிறப்பாகும்.

கோயிலின் சத்திய புஷ்கரணி தீர்த்தக் குளம், தாமரைமலர் தோற்றத்தில் எண் கோண வடிவில் 8 படித்துறைகளுடன் அமைந்துள்ளது. இந்த தீர்த்தக்குளத்தில் தண்ணீரைத் தொட்டாலோ அல்லது சத்தியதீர்த்தம் என வாயினால் சொன்னாலோ போதும் பாவங்கள் விலகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த தீர்த்தக் குளத்தில் தண்ணீர் எப்போதும் வற்றாத நிலையில் காணப்படும். திருமணம் மற்றும் குழந்தைப்பேறு வேண்டி வரும் பக்தர்கள் சத்தியமூர்த்தி பெருமாள் மற்றும் உஜ்ஜீவனத் தாயாரை மனதால் வேண்டினால், அவர்கள் கேட்ட வரம் கிடைக்கும். குழந்தைப் பேறு வேண்டுபவர்கள் தாயாருக்கு மண்ணாலான விளையாட்டுப் பொம்மைகளைக் காணிக்கை அளிக்கின்றனர்.

கோவீ.ராஜேந்திரன்

The post குறை தீர்க்கும் பெருமாள்கள் appeared first on Dinakaran.

Read Entire Article