சென்னை: குரோம்பேட்டையில் 2 கடைகளின் சுவரில் துளைபோட்டு, ரூ.20 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்கள் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் கடந்த 7 மாதம் தலைமறைவாக இருந்த மேவாட் கொள்ளையனை அரியானா மாநிலத்தில் வைத்து தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையில் பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த தமிம் அன்சாரி (33) என்பவர் செல்போன் கடையும், மன்சூர் அலிகான் (31) என்பவர் துணிக்கடையும் நடத்தி வருகிறார்கள். கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்தபின் கடையை மூடிவிட்டுச்சென்ற இருவரும் மறுநாள் காலை மீண்டும் கடைக்கு வந்து பார்த்த போது கடையில் இருந்த பொருட்கள் கலைந்த நிலையிலும் ஆங்காங்கே சில பொருட்கள் கீழே விழுந்து சிதறிய நிலையிலும் இருந்தன.
இதில் கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே வந்த மர்ம நபர்கள் செல்போன் கடையில் இருந்த சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான 80க்கும் மேற்பட்ட புதிய செல்போன்கள் மற்றும் கல்லாவில் இருந்த ரூ.1.20 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். இதேபோல் அருகில் இருந்த துணி கடையின் சுவரிலும் துளையிட்டு அங்கிருந்த ரூ.40 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதனால் அதிர்ச்சடைந்த கடை உரிமையாளர்கள் அன்சாரி மற்றும் மன்சூர் ஆகியோர் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் கைரேகை நிபுணர்களுடன் சம்பவம் நடைபெற்ற கடைகளுக்குச் சென்று அங்கு பதிவாகி இருந்த கைரேகைகள் மற்றும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது அரியானா மாநிலம் மேவாட் பகுதியைச் சேர்ந்த ஆசாமிகள் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, தனிப்படை அமைத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 1ம் தேதி அரியானா மாநிலத்திற்குச் சென்ற தனிப்படை போலீசார் தவ்டு கிராமத்தைச் சேர்ந்த இர்பான் கான் (35) என்பவரை மடக்கிப் பிடித்து கைது செய்து, அவனை சென்னை அழைத்து வந்தனர். அவனிடமிருந்து ஐபேட் மற்றும் 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் முக்கிய குற்றவாளியை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
The post குரோம்பேட்டையில் 80 செல்போன்கள், ரூ.1.50 லட்சம் திருட்டு அரியானாவில் பதுங்கிய மேவாட் கொள்ளையன் துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து கைது: தனிப்படை போலீசார் அதிரடி appeared first on Dinakaran.