சென்னை: குரூப் 4 தேர்வு வினாத்தாள்கள் எதுவும் கசியவில்லை என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பிரிவில் 3935 காலி பணியிடங்களுக்கான தேர்வு நாளை நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு பணியாளர்களுக்கான தேர்வினை TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதில் குரூப் 4 பிரிவில் மொத்தம் 3935 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் கடந்த ஏப்ரல் 25ம் தேதி முதல் பெறப்பட்டன. விண்ணப்பங்கள் கடந்த மே 24ம் தேதி வரை பெறப்பட்டன. இதில் லட்சக்கணக்கானோர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கான எழுத்து தேர்வு நாளை (12ம் தேதி) காலை 9.30க்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது. இதற்கான வினாத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. அந்தவகையில், மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து வினாத்தாள்கள் தனியார் பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக கண்டெய்னர் வாகனங்களில் வினாத்தாள்கள் எடுத்துச் செல்லப்படும். ஆனால், மதுரையில் தனியார் பேருந்தில் எடுத்துச் செல்லப்பட்டதும், அதற்கு ஏ4 தாளில் சீல் வைத்து அனுப்பியதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லட்சக்கணக்கானோர் எழுதும் அரசு தேர்வுக்கான வினாத்தாளை இப்படி அனுப்புவதன் மூலம், வினாத்தாள் கசிய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இதற்கு டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள விளக்கத்தில், “நாளை (ஜூலை 12ம் தேதி) நடைபெற உள்ள குரூப்-4 வினாத்தாள் கசியவில்லை; தேர்வர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
The post குரூப் 4 தேர்வு வினாத்தாள்கள் எதுவும் கசியவில்லை: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் விளக்கம் appeared first on Dinakaran.