குரங்கை கவ்விச்சென்ற சிறுத்தை குடியாத்தம் அருகே பரபரப்பு குடியிருப்பு பகுதியில் புகுந்து

1 week ago 3

குடியாத்தம், பிப்.15: குடியாத்தம் அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை புகுந்து குரங்கை கவ்விச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் உட்பட வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கே.வி.குப்பம் அடுத்த துருவம் கிராமத்தில் சிறுத்தை தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், குடியாத்தம் அடுத்த காந்திகணவாய் பகுதியில் தொடர்ந்து ஆடு, மாடு மற்றும் கோழிகளை சிறுத்தை தாக்கி வருவதாக கூறப்படுகிறது. எனவே, சிறுத்தையை நடமாட்டத்தை கண்காணித்து பிடிக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் இந்நிலையில், நேற்று முன்தினம் குடியாத்தம் அடுத்த சாமியார்மலையை ஒட்டிய குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, அங்கிருந்த குரங்கை தாக்கி இழுத்து கொண்டு ஓடியது.

இதை பார்த்த மூதாட்டி அச்சமடைந்து கத்தி கூச்சல் போட்டார். அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த சிறுத்தை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது. தொடர்ந்து, நேற்றும் குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டியில் சிறுத்தை நடமாடியதாக கூறப்படுகிறது. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும், சிறுத்தை நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post குரங்கை கவ்விச்சென்ற சிறுத்தை குடியாத்தம் அருகே பரபரப்பு குடியிருப்பு பகுதியில் புகுந்து appeared first on Dinakaran.

Read Entire Article