கும்மிடிப்பூண்டி அருகே பயங்கரம்; ஓசியில் பொருள் கொடுக்காத ஆத்திரத்தில் மளிகைக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலைமறியல்

3 months ago 18

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஓசியில் பொருள் கொடுக்காததால் மளிகைக் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு கிராமத்தில் சீனிவாசன் (35) என்பவருக்குச் சொந்தமான மளிகைக்கடை அமைந்துள்ளது. தனது கடையில் சீனிவாசன் நேற்று முன்தினம் வழக்கம்போல் விற்பனையில் ஈடுபட்டபோது அதே பகுதியைச் சேர்ந்த தீனா (32) என்ற வாலிபர் பணம் கொடுக்காமல் மளிகைப் பொருட்கள் கேட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு மறுத்த கடை உரிமையாளர் சீனிவாசனை கடையில் பெட்ரோல் குண்டு வீசிவிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திடீரென நள்ளிரவில் மளிகைக்கடை தீப்பற்றி எரிவதாக உரிமையாளர் சீனிவாசனுக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது கடையில் இருந்த சுமார் ₹1 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருட்கள் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்கள் தீயில் பற்றி எரிந்துகொண்டிருந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சீனிவாசன் பாதிரிவேடு காவல் நிலைய போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்னதாகவே கடையில் இருந்த பணம் மற்றும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. இதில், தீனா ஓசியில் பொருள் கேட்டு தன்னை மிரட்டியதாகவும், அதற்கு மறுத்ததால் அவர், தனது கடையில் பெட்ரோல் குண்டு வீசுவதாக எச்சரித்துச் சென்றதாகவும் கடையின் உரிமையாளர் சீனிவாசன் போலீசாரிடம் புகார் மனுவாக வழங்கியுள்ளார். ஆனால் அவரது புகார் மீது போலீசார் நடவடிக்கையோ, விசாரணையோ மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பூவலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென கவரப்பேட்டை – சத்தியவேடு நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு விரைந்து வந்த பதிரிவோடு போலீசாரை சிறைபிடித்த அப்பகுதி மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கவரப்பேட்டை-சத்தியமேடு சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

The post கும்மிடிப்பூண்டி அருகே பயங்கரம்; ஓசியில் பொருள் கொடுக்காத ஆத்திரத்தில் மளிகைக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலைமறியல் appeared first on Dinakaran.

Read Entire Article