கும்மிடிப்பூண்டி, பிப். 15: கும்மிடிப்பூண்டி அருகே நீதிமன்ற உத்தரவுப்படி வனத்துறைக்குச் சொந்தமான 66 வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது. அப்போது வட்டாட்சியரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் 3 நாள் அவகாசம் வழங்கப்பட்டதால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சியில் மேல்பாக்கம், குமரன்நாயக்கன்பேட்டை, சித்தூர் நத்தம், கோங்கல்மேடு உள்ளிட்ட 5 கிராமங்களில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு மேல்பாக்கம் என்ற ஒரு பகுதியில் சுமார் 90 வீடுகளில் உள்ளவர்கள் காலம்காலமாக வசித்து வருகின்றனர். இவர்கள் அருகே உள்ள விளைநிலங்களில் விவசாயம் செய்து தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மேல்பாக்கம் கிராமத்தைச் சுற்றி வனத்துறைக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலம் இருந்து வருகிறது. இதில் தேக்கு, தைல மரம் உள்ளிட்ட மரங்களை வனத்துறை அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர். இதில் ஒரு சில இடங்களில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு 66 வீடுகள் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கு சம்பந்தமாக இரண்டு முறை உயர்நீதிமன்றம் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தை உடனடியாக அகற்றி அந்த இடத்தில் மரங்களை வைக்க கடந்த 2023ம் ஆண்டு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக ஏற்கனவே வட்டாட்சியர் உத்தரவின் பேரில் மேற்கண்ட 66 வீடுகளுக்கு முறையாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை அந்த குடியிருப்புகள் அகற்றப்படாமல் இருப்பதாக, வழக்கு தொடர்ந்த நபர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வனத்துறை சார்பாக மேற்கண்ட 66 வீடுகளை உடனடியாக காலி செய்ய வேண்டும், இல்லையென்றால் வீடுகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்படும் என ஒரு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வீடுகள் தோறும் வழங்கப்பட்டது.
இதை அறிந்த முன்னாள் ஊராட்சி தலைவர் உஷா ஸ்ரீதர், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார், ஊர் கிராம பொதுமக்கள், கம்யூனிஸ்ட் விவசாய சங்க மாவட்டச் செயலாளர் துளசி நாராயணன், பாமக பிரகாஷ் ஆகியோர் இதே பகுதியில் மாற்று இடம் வழங்கிய பின்னர் இந்த குடியிருப்புகளை அகற்ற வேண்டும், தற்போது இந்த குடியிருப்புகளை உடனடியாக அகற்றினால் அனைவரும் ரோட்டில் நிற்கும் நிலைமை ஏற்படும் என அரசுக்கு எடுத்துரைத்தனர். ஆனால் தாசில்தார் சரவணகுமாரி உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதால் அனைத்து அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு வழங்க கோரியுள்ளனர் என்றார். அதன்படி அனைத்து துறை அதிகாரிகளும் நேற்று காலை சுமார் 8 பொக்லைன் இயந்திரம், நான்கு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் வீடுகளை இடிக்க முற்பட்டனர்.
இதை அறிந்த ஊர் பொதுமக்கள் அதிகாரிகளை மடக்கி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்பு சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள், வட்டாட்சியர், கோட்டாட்சியர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின்போது நாங்களும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது என்றுகூறி அதிகாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமன்றி இதே பகுதியில் எங்களுக்கு மாற்று இடம் வழங்கிய பின்னர் வீடுகளை இடிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதை அதிகாரிகள் ஏற்க மறுத்ததால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களை குண்டுகட்டாக அரசுப் பேருந்தில் ஏற்றி தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
பின்னர் வட்டாட்சியர் சரவணகுமாரி சுமார் 3 மணி நேரம் காலக்கெடு கொடுத்துள்ளார். அதன் பின்பு மதியம் 12 மணியளவில் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு வீடுகளை இடிக்க நெருங்கியபோது, உடனடியாக குடியிருப்பு வாசிகள் வீட்டில் இருக்கும் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை அவசர அவசரமாக எடுத்து வைத்து கண்ணீர் வடித்தனர். அதைத் தொடர்ந்து 2 வீடுகளின் முன்பகுதியை இடித்த பின்பு ஏற்கனவே இது சம்பந்தமாக பொதுமக்கள் குடியிருப்புகளை இடிப்பதற்கு கால அவகாசம் தேவை என உயர்நீதிமன்றத்தில் கொடுத்திருந்த மனு எடுத்துக் கொள்ளப்பட்டு 3 நாள் கால அவகாசம் கொடுக்கும்படி உயர்நீதிமன்றம் வனத்துறைக்கு உத்தரவு ஒன்று பிறப்பித்தது. அந்த உத்தரவை தொடர்ந்து ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்காமல் அதிகாரிகளும் போலீசாரமும் திரும்பிச் சென்றனர். இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை ஆகிய சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
The post கும்மிடிப்பூண்டி அருகே நீதிமன்ற உத்தரவுப்படி வனத்துறைக்குச் சொந்தமான 66 வீடுகளை இடிக்கும் பணி: வட்டாட்சியரை முற்றுகையிட்டு வாக்குவாதம் அவகாசம் வழங்கப்பட்டதால் பாதியில் நிறுத்தம் appeared first on Dinakaran.