
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மேல்பாக்கம் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து 66 வீடுகள் கட்டப்பட்டுருந்தன. இதனை அகற்றக்கோரி தனி நபர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி வீடுகளை அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்களை அப்பகுதி பொதுமக்கள் தடுத்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அப்போது தங்களுக்கே நிலத்தை சொந்தமாக்க வேண்டும் என்று மேல்பாக்கம் கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
போராட்டம் குறித்து தகவலறிந்து சென்ற கும்மிடிப்பூண்டி தாசில்தார் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் நடத்திய மக்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். மேலும் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்கள் மூலம் வீடுகள் இடிக்கும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.