கும்பமேளாவில் தீ விபத்து; 10 குடிசைகள் எரிந்து நாசம்

3 hours ago 1

பிரயாக்ராஜ்,

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த 13-ந் தேதி தொடங்கிய இந்த மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வு நாடு முழுவதும் இந்துக்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

மேலும் மத்திய மந்திரிகள், வெளிநாட்டு தூதர்கள் என ஏராளான பிரபலங்களும் கும்பமேளாவில் பங்கேற்று உள்ளனர். மவுனி அமாவாசையை முன்னிட்டு கடந்த 29-ம் தேதி பிரயாக்ராஜில் சுமார் 10 கோடி பக்தர்கள் திரண்டனர். அன்றைய தினம் திரிவேணி சங்கமத்தில் சுமார் 10 லட்சம் பேர் ஒரே நேரத்தில் புனித நீராட குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்தனர். 60 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து மகா கும்பமேளாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

கும்பமேளாவுக்கு தினமும் சராசரியாக 50 லட்சம் முதல் சுமார் ஒரு கோடி வரை பக்தர்கள் வருகை தருகிறார்கள். அதிகாலை முதலே புனித நீராடும் பக்தர்கள், இரவில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் பந்தல்களில் தங்கி வருகிறார்கள். இதற்காக பல்வேறு இடங்களில் பெரிய முகாம்களும் அவற்றில் ஏராளமான சிறுசிறு பந்தல் குடிசைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

நேற்று மகாகும்பமேளா நகரின் செக்டார் 18-ல் அமைந்துள்ள இஸ்கான் முகாம் பகுதியில் பந்தல் குடிசையில் திடீரென தீப்பற்றி விபத்து ஏற்பட்டது. அந்த தீ மளமளவென பரவி அருகில் இருந்த 10-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்தன.

இருந்தபோதிலும் ஆரம்பத்திலேயே பக்தர்கள் சுதாரித்துக்கொண்டு குடிசைகளை விட்டு வெளியேறி மற்றவர்களையும் எச்சரிக்கை செய்ததால் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த ஆண்டு மகா கும்பமேளாவில் இதற்கு முன்பும் 2 முறை இதுபோன்ற தீவிபத்துகள் ஏற்பட்டு உள்ளன. கடந்த 19-ந்தேதி செக்டார் 19-ல் சிலிண்டர் வெடித்ததால் பெரிய அளவில் தீவிபத்து ஏற்பட்டது. இருந்தபோதிலும் தீயணைக்கப்பட்டு, உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டது. கடந்த ஜனவரி 25-ந்தேததி 2-வது முறையாக தீவிபத்து ஏற்பட்டது. அப்போது செக்டார் 2-ல், 2 கார்கள் தீப்பற்றிக்கொண்டன. தற்போது 3-வது முறையாகவும் தீவிபத்து ஏற்பட்டு உள்ளது.

மகா கும்பமேளாவில் மீண்டும் ஏற்பட்ட இந்த தீ விபத்து பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article