ராஜ்காட்: குஜராத்தின் ராஜ்காட்டில் 28 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் திருமணம் செய்துவைப்பதாக கூறி பணத்தை வசூலித்துவிட்டு ஏற்பாட்டாளர்கள் ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குஜராத்தின் ராஜ்காட்டில் 28 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விழா ஏற்பாட்டாளர்கள் மணமகன், மகள் தரப்பில் இருந்து தலா ரூ.15ஆயிரம் வசூலித்துள்ளனர்.
திருமணமான தம்பதிகளுக்கு பரிசுகளுடன் அனைத்தையும் ஏற்பாடு செய்வதாக ஏற்பாட்டாளர்கள் உறுதி அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து 28 ஜோடிகளின் குடும்பத்தினர்கள் நேற்று தாலி மற்றும் மாலையுடன் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்தனர். ஆனால் திருமணம் நடக்கும் என்று கூறியிருந்த இடத்தில் எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாமல் இருந்துள்ளது. மேலும் ஏற்பாட்டளார்களின் செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. அவர்கள் யாரும் அங்கு இல்லாததோடு அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
இதனால் மணமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். விரக்தி அடைந்த அவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பின்னர் அங்கிருந்த 6 ஜோடிகளுக்கு மட்டும் திருமணம் செய்து வைத்தனர். மேலும் சில ஜோடிகள் அருகில் இருந்த கோயில்களிலும், பிற இடங்களிலும் திருமணம் செய்து கொண்டனர். மணமக்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டுள்ளதால் இது குறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post குஜராத்தில் மெகா வசூல் 28 ஜோடிகளிடம் திருமண மோசடி: பணம் வசூலித்துவிட்டு தப்பிய கும்பல் தாலியுடன் வந்தவர்கள் ஏமாற்றம் appeared first on Dinakaran.