தேனி,
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. அருவிக்கு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை பெய்தால் நீர்வரத்து ஏற்படும். இந்த அருவியில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் குளிக்க தடை விதித்திருந்தனர்.
இந்த நிலையில் நீர்வரத்து சீரானதால் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி நேற்று காலையில் அருவியில் நீராடுவதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
இந்த நிலையில் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வட்டக்கானல், பாம்பாறு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மதியம் கனமழை பெய்தது. இதனால் அருவியில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வௌியேற்றினர். இதன் காரணமாக நேற்று மதியம் முதல் சுற்றுலா பயணிகளை குளிக்கவும், அருவிக்கு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.