கும்பகோணம்: பெண் பக்தையை மணந்து கொண்ட சூரியனார் கோவில் ஆதீனம்

2 months ago 11

கும்பகோணம்,

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்திப்பெற்ற சூரியனார் கோவில் ஆதீனம் உள்ளது. இந்த ஆதீனத்தின் 28வது மடாதிபதியாக இருப்பவர் மகாலிங்க சுவாமி. இவருக்கு வயது 54. இவரை ஏராளமான பக்தர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். அடிக்கடி ஆதீனத்துக்கு வந்து மகாலிங்க சுவாமியிடம் பக்தர்கள் ஆசி பெற்று செல்வது வழக்கம்.

இந்நிலையில் பெண் பக்தையை சூரியனார் கோவில் ஆதீன மடாபதிபதி மகாலிங்க சுவாமி திடீரென திருமணம் செய்து கொண்டார். ஹேமா ஸ்ரீ என்ற 47 வயது பக்தரை அவர் கரம் பிடித்துள்ளார். அதாவது பக்தை ஹேமா ஸ்ரீ அடிக்கடி மடாதிபதி மகாலிங்க சுவாமியை சந்தித்து ஆசி வாங்கியுள்ளார்.

இந்த பழக்கம் இருவருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து மகாலிங்க சுவாமி - ஹேமா ஸ்ரீ ஆகியோர் பெங்களூர் சென்று அங்கு வைத்து பதிவு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் பதிவு திருமணம் அக்டோபர் மாதம் 10ம் தேதி நடந்துள்ளது.

கடந்த மாதம் 10ம் தேதியே பதிவு திருமணம் நடந்து இருந்தாலும் கூட அதுபற்றி வெளியில் தெரியாமல் இருந்துள்ளது. இருவரும் ரகசியம் காத்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் இவர்களின் திருமணம் குறித்த தகவல் வெளியானது.

இந்த திருமணம் குறித்து மடாதிபதி மகாலிங்க சுவாமி சமூக வலைதள பதிவில் கூறியதாவது:- ‛ஆதீன மடாதிபதியாக திருமணம் ஆனவர்களும் இருந்துள்ளனர். நான் யாரிடமும் எதையும் மறைக்க விரும்பவில்லை. நான் திருமணம் செய்துள்ள ஹேமா ஸ்ரீ மடத்துக்கு பக்தையாக வந்தவர். இனியும் அவர் பக்தையாக தொடர்வார்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் பெண் பக்தரை அவர் திருமணம் செய்து உள்ளது உறுதியாகி உள்ளது.

பொதுவாக மடாதிபதியாக இருப்பவர்கள் இல்லற வாழ்க்கையில் இருந்து விலகியே இருப்பார்கள். ஒன்று திருமணமாகி மனைவியை பிரிந்து துறவியான பிறகு மடாதிபதியாக இருப்பார்கள். இல்லாவிட்டால் திருமணமே முடிக்காமல் துறவு பூண்டு மடாதிபதியாக இருப்பார்கள். ஆனால் தற்போது சூர்யனார் கோவில் ஆதீன மடாதிபதி, மடாதிபதியாக இருந்து கொண்டே பெண் பக்தையை திருமணம் செய்துள்ளார். அதோடு திருமணம் செய்தும் மடாதிபதியாக பலபேர் செயல்பட்டுள்ளதாக விளக்கம் அளித்து இருப்பது அவரது பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

முன்னதாக இந்த சூரியனார் கோவில் ஆதீன மடாதிபதியாக சங்கரலிங்க தேசிய பராமாசாரிய சுவாமிகள் இருந்தார். இவர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கோரடங்குளத்தை சேர்ந்தவர். இவர் தனது 102வது வயதில் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் காலமானார். அதன்பிறகு ஆதீனத்தின் 28வது மடாதிபதியாக மகாலிங்க சுவாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் பெண் பக்தைய ஹேமா ஸ்ரீயை பெங்களூரில் பதிவு திருமணம் செய்து கொண்ட சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Read Entire Article