விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், வனத்துறை சார்பில், மாநில அளவிலான வன அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நேற்று நடைபெற்றது.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆய்வுக்கூட்டத்தில் கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்து, விரிவாக விவாதிக்கப்
பட்டது. குறிப்பாக, வரவிருக்கிற காலங்களில் முதல்வர் அறிவித்திருக்கிற பசுமை தமிழகம் திட்டத்தை தமிழ்நாட்டில் எவ்வாறு சிறப்பாக செயல்படுத்துவது, அதேபோல வனவிலங்குகளை எவ்வாறு பாதுகாப்பது, அதேநேரத்தில் வனவிலங்குகளால் விவசாயிகளுக்கோ, பொதுமக்களுக்கோ எந்த இடையூறும் ஏற்படாதவாறு தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்பட்டு அதற்கான முடிவுகள் எல்லாம் எடுக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் காட்டுப்பன்றிகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. விவசாயிகளின் நலன் கருதி 3 கிலோ மீட்டருக்கு மேல் வெளியே வரும் காட்டுப்பன்றிகளை சுடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, எந்தெந்த கிராமப்பகுதிகளில் காட்டுப்பன்றிகள் வருகின்றனவோ, அந்த கிராமத்தின் தலைவர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அப்பகுதியின் வனத்துறை அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது இதுபோன்று இப்பகுதியில் காட்டுப்பன்றிகள் இருக்கிறது என்று தகவல் அளிக்குமானால் வனத்துறை சுடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும். வனத்துறை இல்லாத பகுதிகளில் காட்டுப்பன்றிகள் வந்தால் கிலோ மீட்டர் என்ற கணக்கீடு ஏதும் இல்லாமல் சுடுவதற்கான உரிமையும் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்பணியை முறையாக வனத்துறை அலுவலர்கள் மேற்கொள்வார்கள். எனவே, விவசாய நிலங்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கருத்தில் கொண்டுதான் அரசாணை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், காட்டு யானைகளால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் பயிற்சி அளிக்கப்பட்ட கும்கி யானைகள் மூலம் காட்டு யானைகள் விரட்டும் பணிகளும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்கும், அதேபோல் வனவிலங்குகளையும் பாதுகாப்பதற்கான முன்னெடுப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post கும்கி மூலம் காட்டு யானைகளும் விரட்டப்படும் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றியை சுட்டுத்தள்ள குழு: விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி பேட்டி appeared first on Dinakaran.