நாகர்கோவில், ஏப். 29: குமரி மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையிலும், போக்சோ இல்லாத குமரியை உருவாக்கும் வகையிலும் எஸ்.பி. ஸ்டாலின், நிமிர் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் முழுக்க, முழுக்க பெண் போலீசார் நியமிக்கப்பட்டு போக்சோ குற்ற விழிப்புணர்வு பிரசார இயக்கத்தை தொடங்கி உள்ளனர். நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல், கன்னியாகுமரி ஆகிய 5 துணை போலீஸ் சரகங்களுக்கும் தலா மூன்று பெண் போலீசார் வீதம் 15 பெண் போலீசார் போக்சோ தொடர்பான குற்றங்கள், அதற்கான தண்டனைகள் பற்றி எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் மார்த்தாண்டம் துணை போலீஸ் சரகத்துக்கான நிமிர் திட்ட விழிப்புணர்வு பிரசார குழுவினர், நேற்று மார்த்தாண்டம் பகுதியில் விழிப்புணர்வு பிரசாரத்தில் இருந்தனர். அப்போது ஒரு தம்பதியினர் தங்களது 16 வயது மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்வது தெரிய வந்தது. உடனடியாக அந்த வீட்டுக்கு சென்று குழந்தை திருமணத் தடை சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி, சிறுமிக்கு நடைபெறவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். சிறப்பாக செயல்பட்டு குழந்தை திருமணத்தை தடுத்த நிமிர் குழுவினரை எஸ்.பி. ஸ்டாலின் பாராட்டினார்.
The post குமரியில் நிமிர் திட்டத்தால் 16 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் நிறுத்தம் மகளிர் போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு appeared first on Dinakaran.