
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே செயல்பட்டு வரும் அன்னை முதியார் இல்லத்தை ரகுராஜன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த 15-ந்தேதி முதியோர் இல்லத்திற்கு முகக்கவசம் அணிந்தபடி வந்த மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார்.
தன்னை சி.ஆர்.பி.எப். வீரர் என்று அறிமுகம் செய்து கொண்ட அவர், தங்களது சி.ஆர்.பி.எப். முகாமை காலி செய்துவிட்டு வெளிமாநிலத்திற்கு செல்ல இருப்பதாகவும், ஆகையால் அங்கு பயன்படுத்தப்பட்டு வந்த எலக்ட்ரானிக் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய ரகுராஜன், அந்த நபரிடம் ரூ.43 ஆயிரத்தை வழங்கியுள்ளார். அந்த நபர் பணத்தை பெற்றுக்கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் ரகுராஜனை மார்த்தாண்டம் பகுதி வரை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் ரகுராஜனிடம், அங்கேயே சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறி அவரை இறக்கி விட்டுள்ளார்.
பொருட்களை எடுத்துக் கொண்டு வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த ரகுராஜன், அந்த நபர் கொடுத்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் அந்த நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து அருமனை காவல் நிலையத்தில் ரகுராஜன் புகார் அளித்தார்.
போலீசார் முதியோர் இல்லத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபர் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர் உண்மையிலேயே சி.ஆர்.பி.எப். வீரர் தானா? அல்லது அதையும் பொய்யாக கூறியுள்ளாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.