மதுரை: அரசுப் பள்ளி தூய்மைப் பணியாளர்களுக்கு பணப்பலன் வழங்க மறுத்தது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலருக்கு ஒரு வாரம் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் அரசு மேல் நிலைப்பள்ளி, ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் அரசு மேல் நிலைப்பள்ளி, மார்த்தாண்டம் கொடுங்குளம் அரசு பள்ளிகளில் 35 ஆண்டுகள் தூய்மைப் பணியாளர்களாக பணிபுரிந்து 2011-ல் ஓய்வு பெற்றவர்கள் முறையே பொன்னம்மாள், ஸ்ரீதேவி, செல்வக்கிளி. இவர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்கி, ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்கள் வழங்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் 2023-ல் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த தனி நீதிபதி, தூய்மைப் பணியாளர்களுக்கு 12 வாரத்தில் ஓய்வூதியப் பலன்கள் வழங்க உத்தரவிட்டது.